இந்தி திரைப்பட இயக்குநர், நாவல் ஆசிரியர், பத்திரிகையாளர் என்ற பன்முகத் திறன் கொண்ட காஜா அஹமது அப்பாஸ் (Khwaja Ahmad Abbas) பிறந்த தினம் இன்று (ஜூன் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
lஹரியானா மாநிலம் பானிபட் நகரில் பிரபல உருது கவிஞர் காஜா அல்தாஃப் ஹுசேன் ஹாலியின் குடும்பத்தில் (1914) பிறந்தவர். பி.ஏ. ஆங்கில இலக்கியமும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்
கழகத்தில் சட்டப்படிப்பும் படித்து விட்டு, பத்திரிகையாளராக வாழ்க்கையைத் தொடங்கி னார்.
lசட்டம் படிக்கும்போதே, இந்திய பல்கலைக்கழக மாணவர்களின் முதல் மாதப் பத்திரிகையான ‘அலிகார் ஒபீனியன்’ இதழைத் தொடங்கினார். பாம்பே க்ரானிகல் பத்திரிகையில் 1935-ல் சேர்ந்தார். திரை விமர்சனங்களும் எழுதினார்.
l நயா சன்சார் என்ற முதல் திரைக்கதையை 1941-ல் எழுதி விற்றார். பாம்பே க்ரானிகல் இதழில் வாரம் ஒருமுறை ‘லாஸ்ட் பேஜ்’ என்ற அரசியல் கட்டுரை எழுதிவந்தார். பிளிட்ஸ் இதழில் சேர்ந்த பிறகு, அதன் உருதுப் பதிப்பில் இதே தொடரை ‘ஆசாத் காலம்’ என்ற தலைப்பில் இறுதிவரை (1935-1987) எழுதிவந்தார். இதுதான் இந்திய வரலாற்றில் நீண்ட காலம் தொடராக வந்த அரசியல் கட்டுரை. மிர்ரர் இதழிலும் இறுதிவரை எழுதினார். குருஷேவ், ரூஸ்வெல்ட், சார்லி சாப்ளின், மா சே துங், யூரி காகரின் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற பிரமுகர்களை பேட்டி கண்டவர்.
l இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை தொடர்ந்து, இவரது தாய் உட்பட அனைவரும் பாகிஸ்தான் சென்றுவிட, இவர் மட்டும் இந்தியாவை விட்டு வர மறுத்து இங்கேயே தங்கிவிட்டார்.
l நீச்சா நகர், டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி உட்பட பல படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார். தர்தி கே லால் என்ற திரைப்படத்தை 1945-ல் முதன்முதலாக இயக்கினார்.
l ராஜ்கபூரும் இவரும் நெருங்கிய நண்பர்கள். இவர் திரைக்கதை எழுதிய ராஜ்கபூரின் ஆவாரா, -420, ஜாக்தே ரஹோ, மேரா நாம் ஜோக்கர், ஹென்னா ஆகிய திரைப்படங்கள் பிரபலமானவை. 1951-ல் நயா சன்சார் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். அன்ஹோனி, முன்னா, ராஹி உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்தார்.
l இவரது படைப்புகள் சமூக விழிப்புணர்வு, தேசிய ஒருமைப்பாட்டை எடுத்துக் கூறின. இவர் எழுதி இயக்கிய பல திரைப்படங்கள் மாநில, தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றன. இவற்றில் ஷெஹர் அவுர் சப்னா, அமிதாப் பச்சன் அறிமுகமான சாத் ஹிந்துஸ்தானி குறிப்பிடத்தக்கவை.
l ஆங்கிலம், இந்தி, உருது மொழிகளில் 73 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். ‘ஐ யாம் நாட் அன் ஐலேண்ட்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதினார்.
l இவரது சிறுகதைகள், நாவல்கள் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டன. நர்கீஸ் தத் விருது, சோவியத் யூனியன் விருது, காலிப் விருது, பத்ம உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
l சினிமா, பத்திரிகை, எழுத்து என பல களங்களில் தனிமுத்திரை பதித்த காஜா அஹமது அப்பாஸ் 73 வயதில் (1987) மறைந்தார்.