வலைஞர் பக்கம்

இன்று அன்று | 2004 ஜூன் 10: இசை மூலம் உலகை கண்ட கலைஞர்

சரித்திரன்

அமெரிக்க இசையுலகில் மறக்கவே முடியாத பெயர், ‘ரே’. 1950-களில் ரிதம் அண்ட் ப்ளூஸ், ஜாஸ், ஆப்பிரிக்க-அமெரிக்க கோஸ்பெல் இசை ஆகியவற்றின் கலவையாக, ‘சோல் மியூசிக்’ எனும் இசை வடிவத்தை வளர்த்தெடுத்த இசைக் கலைஞர்களில் முக்கியமானவர். இளம் வயதிலேயே பார்வை இழந்த அவர், தனது அபார இசையறிவின் மூலம் அமெரிக்காவின் இசையுலகில் தனித்த இடத்தைப் பெற்றார். இசை நிறுவனங்களால் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த முதல் கருப்பின இசைக் கலைஞர் இவர்தான். ஜியார்ஜியா மாகாணத்தின் அல்பேனி நகரில், ரயில்வே தொழிலாளி பெய்லி ராபின்ஸன், கூலித்தொழில் செய்துவந்த அரீதா தம்பதிக்கு 1930 செப்டம்பர் 23-ல் பிறந்தவர் ரே சார்லஸ் ராபின்ஸன்.

தனது ஐந்தாவது வயதில் தனது தம்பி ஜார்ஜின் மரணத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவில்லை. விரைவிலேயே பார்வையையும் இழந்தார். அதன் பின்னர், ஃப்ளோரிடாவில் உள்ள மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கான பள்ளியில் அவரைச் சேர்த்தார் அவரது அம்மா. அங்குதான் இசையின் அறிமுகம் ரே-க்குக் கிடைத்தது. இளம் வயதிலேயே பாஹ், மொஸார்ட், பீத்தோவன் போன்ற மேதைகளின் இசைக்கோவைகளை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். இசைக்குறிப்புகளை பிரெய்லி முறையில் கற்றுக்கொண்டவர் அவர். பிரபல இசைக்குழுக்களில் பியானோ வாசிக்கத் தொடங்கினார்.

1949-ல் ‘கன்ஃபெஷன்ஸ் ப்ளூஸ்’ எனும் இசைக்குழுவைத் தொடங்கினார். ‘ஸ்விங் டைம் ரெக்கார்ட்ஸ்’ எனும் இசை நிறுவனத்துடன் இணைந்து ‘பேபி லெட் மீ ஹோல்டு யுவர் ஹேண்ட்’(1951) உட்பட சில ஆல்பங்களை வெளியிட்டார். தொடர்ந்து, ‘வாட்’ட் ஐ ஸே’, ‘தி ஜீனியஸ் சிங்ஸ் தி ப்ளூஸ்’ உட்பட பல ஆல்பங்கள் அவருக்குப் புகழ் சேர்த்தன. கருப்புக் கண்ணாடி அணிந்துகொண்டு, பியானோவை இசைத்தபடி அவர் பாடும் பாடல்கள் அமெரிக்க ரசிகர்களைக் கிறங்கடித்தன. தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கும் மேலாக இசையுலகில் பல வெற்றிகளைக் குவித்தார். 2004-ல் ‘ரோலிங் ஸ்டோன்’ இதழ் வெளியிட்ட ‘100 சிறந்த கலைஞர்கள்’ பட்டியலில் 10-வது இடம் அவருக்குக் கிடைத்தது. அதே ஆண்டு ஜூன் 10-ல் ரே காலமானார். அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘ரே’ திரைப்படமும் அதே ஆண்டுதான் வெளியானது. அதில் ரே-யாகத் தத்ரூபமாக நடித்த ஜேமி ஃபாக்ஸுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது. குவெண்டின் டாரன்டினோவின் ‘ஜாங்கோ அன்செயின்டு’படத்தில் கருப்பின கெளபாயாக நடித்து அசத்தியவர் இதே ஜேமி ஃபாக்ஸ்தான்!

SCROLL FOR NEXT