ஜீன் பால் சார்ட்டர் - பிரான்ஸ் தத்துவமேதை, எழுத்தாளர்
# பிரான்ஸ் நாட்டின் இலக்கிய திறனாய்வாளரும், தத்துவமேதையுமான ஜீன் பால் சார்லஸ் அய்மார்டு சார்ட்டர் (Jean Paul Charles Aymard Sartre) பிறந்த தினம் இன்று (ஜூன் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# பாரீஸில் (1905) பிறந்தவர். கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிய தந்தை, இவருக்கு 2 வயது இருந்த போது இறந்துவிட்டார். தாயுடன் மியூடோன் நகருக்குச் சென்றவர் அங்கு தாத்தாவின் கண்காணிப்பில் வளர்ந்தார்.
# ஜெர்மன் மொழிப் பேராசிரியரான தாத்தா, இவருக்கு கணிதம் கற்றுத் தந்ததோடு பண்டைய இலக்கியங்களையும் சிறு வயதிலேயே அறிமுகம் செய்தார். தாய் மறுதிருமணம் செய்துகொண்டதால், லா ரூஷெல் நகருக்கு குடிபெயர்ந்தனர்.
# பிரக்ஞை குறித்து ஹென்றி பெர்க்சன் எழுதிய கட்டுரையைப் படித்த இவருக்கு தத்துவத்தில் ஆர்வம் பிறந்தது. தத்துவத்தில் பட்டமும் பின்னர் முனைவர் பட்டமும் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். கன்ட், ஹெகல் போன்ற தத்துவமேதைகளின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். பல ஆண்டுகளாக அலெக்சாண்டர் கோஜெவ்வின் வாராந்திர கருத்தரங்குகளில் தவறாமல் கலந்துகொண்டார்.
# பிரான்ஸ் ராணுவத்தில் 1929 முதல் 1931 வரை வானிலையாளராக பணிபுரிந்தார். அப்போது ஜெர்மன் படையினரிடம் பிடிபட்டு 9 மாதங்கள் போர்க் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டார். அங்குதான் முதன்முதலாக எழுதத் தொடங்கினார். கிறிஸ்துமஸ் பற்றி ஒரு நாடகம் எழுதினார். அங்கு பல படைப்புகளையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
# உடல்நலம் பாதிக்கப்பட்டதால் விடுதலை செய்யப்பட்டவர் பாரீஸில் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். எழுதியும் வந்தார். ‘இருத்தலியல் என்பது ஒரு மனிதநேயம்’ (Existentialism is a Humanism) என்ற தனது தத்துவக் கோட்பாட்டை 1946-ல் அறிமுகம் செய்தார்.
# பல இடங்களில் உரையாற்றினார். பல கட்டுரைகளை எழுதினார். அவை ஜெர்மனி அரசால் தணிக்கை செய்யப்படாமல் வெளியிடப்பட்டன. அனைத்து பத்திரிகைகளிலும் இவை பிரசுரமாகின.
# கொம்பட் (Combat) என்ற இலக்கிய, அரசியல் திறனாய்வு இதழில் எழுதினார். அந்த இதழ் தொடர்ந்து வெளிவர உதவினார். ஆசிரியப் பணியில் இருந்து விலகி, எழுதுவதிலும் அரசியல் நடவடிக்கைகளிலும் முழு நேரத்தையும் செலவிட்டார்.
# இவரது அற்புத இலக்கியப் படைப்புகளுக்காக 1964-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ‘நடைபெற்று வரும் கிழக்கு - மேற்கு கலாச்சார போராட்டத்தில் எந்த தரப்பையும் ஆதரிக்க நான் விரும்பவில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரிக்கும் அமைப்பிடம் இருந்து பரிசைப் பெற விருப்பம் இல்லை’ என்று கூறி நோபல் பரிசை நிராகரித்துவிட்டார்.
# 20-ம் நூற்றாண்டில் பிரான்ஸின், குறிப்பாக மார்க்சிய முன்னணி தத்துவவாதியாகவும் கருதப்பட்டார். இவரது எழுத்துகள் இன்றும்கூட இலக்கியப் படைப்பாளிகள், திறனாய்வாளர்களுக்கு உத்வேக சக்தியாக விளங்குகின்றன.
# மிக எளிமையாக வாழ்க்கை நடத்தியவர். சிறந்த தத்துவமேதை, நாடக ஆசிரியர், திரைக்கதை எழுத்தாளர், அரசியல் ஆர்வலர், இலக்கிய விமர்சகர், பிரான்ஸ் அறிவுசார் சமூகத்தில் முக்கிய படைப்பாளி என்று பன்முகத் திறன் கொண்ட ஜீன் பால் சார்ட்டர் 75 வயதில் (1980) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்