சாஸ்திரிய இசைப் பாரம்பரியத்தில் வந்த இந்திய இசைக் கலைஞர்களில், இங்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் புகழ்பெற்றவர்கள் உண்டு.
சாஸ்திரிய இசை மட்டுமல்லாமல், வெகுஜன ரசனையுடன் கலந்துவிட்ட திரையிசையிலும் அவர்களது பங்களிப்பு இருந்திருக்கிறது. அந்த வரிசையில் இடம்பெறும் சரோத் இசைக் கலைஞர் உஸ்தாத் அலி அக்பர் கான்.
கிழக்கு வங்காளத்தின் குமில்லா பகுதியில் (தற்போது இப்பகுதி வங்கதேசத்தில் இருக்கிறது) உள்ள ஷிப்புர் எனும் சிறு கிராமத்தில் 1922 ஏப்ரல் 14-ல் பிறந்தவர் அலி அக்பர் கான். அவரது தந்தை அலாவுதின் கான் புகழ்பெற்ற இசையாசிரியர். அலி அக்பர் கான் பிறந்து சில ஆண்டுகளிலேயே மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் மைஹார் பகுதிக்கு அவரது குடும்பம் இடம்பெயர்ந்துவிட்டது. இளம் வயதிலிருந்தே தனது தந்தையிடம் இசைப் பயிற்சியைத் தொடங்கிவிட்ட அலி அக்பர் கான், பல்வேறு இசைக் கருவிகளிலும் வாய்ப்பாட்டிலும் கற்றுத் தேர்ந்தார். 13-வது வயதில் அலகாபாதில் அரங்கேற்றம் செய்தார். தனது சகோதரர் உதய் சங்கருடன் இணைந்து நடனத்தில் ஈடுபாடு காட்டிவந்த பண்டிட் ரவிஷங்கர், 1938-ல்தான் சிதார் இசையைக் கற்றுக்கொண்டார். அலி அக்பர் கானின் தந்தை அலாவுதின் கான்தான் அவரது குரு. அதுமட்டுல்ல, 1939-ல் ரவிஷங்கர் அரங்கேற்றம் செய்தபோது அவருடன் இணைந்து சரோத் வாசித்தவர் அலி அக்பர் கான்தான்! அந்த அளவுக்கு இருவரின் இசைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. சேத்தன் ஆனந்த் இயக்கிய ‘ஆந்தியா’ (1952), சத்யஜித் ரேயின் ‘தேவி’ (1960), ஜேம்ஸ் ஐவரி இயக்கிய
‘தி ஹவுஸ்ஹோல்டர்’போன்ற படங்களுக்கு இசையமைத் தார். புகழ்பெற்ற இத்தாலி இயக்குநர் பெர்னாடோ பெர்ட்டோலுச்சியின் ‘லிட்டில் புத்தா’படத்திலும் இவரது இசைப் பங்களிப்பு இருந்தது. எல். சுப்ரமணியம், ஜார்ஜ் ஹாரிஸன், பாப் டைலான் போன்ற புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். 1989-ல் இவருக்கு ‘பத்மபூஷண்’விருது வழங்கப்பட்டது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவிலேயே வசித்துவந்த அலி அக்பர் கான், 2009 ஜூன் 18-ல் காலமானார்.
“10 ஆண்டுகள் இசை பயின்றால், உங்களை நீங்களே திருப்திப்படுத்திக்கொள்ளலாம். 20 ஆண்டுகள் இசை பயின்றால் ரசிகர்கள் முன்னிலையில் உங்கள் திறமையை அரங்கேற்றி அவர்களை மகிழ்விக்கலாம். 30 ஆண்டுகளில் உங்கள் குருவையே திருப்தியடையச் செய்துவிடலாம். ஆனால், ஒரு கலைஞராக உருவெடுக்கப் பல ஆண்டுகாலம் இசைப் பயிற்சி தேவை. அதன் பின்னர், கடவுளைக் கூட உங்கள் இசையால் மகிழ்விக்க முடியும்” என்று கூறியவர் அலி அக்பர் கான்.