ஏழையாகப் பிறந்து தனது அறிவாற்றல் மூலம் செல்வச் செழிப்பை அடைந்து, நாட்டின் சுதந்திரத்துக்காகத் தனது செல்வத்தை அர்ப்பணித்த மாபெரும் மனிதர் மோதிலால் நேரு. ஆக்ராவில் 1861 மே 6-ல் பிறந்தார்.
மோதிலால் பிறப்பதற்கு 3 மாதங் களுக்கு முன்னரே அவரது தந்தை கங்காதர் நேரு காலமாகிவிட்டார். அலகா பாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியாற்றிவந்த மோதிலாலின் அண்ணன் நந்தலால்தான் அவரை வளர்த்தார். அலகாபாதில் குழந்தைப் பருவத்தைக் கழித்த மோதிலால், கான்பூரில் பள்ளிப்படிப்பைத் தொடங் கினார்.
சட்டம் பயின்ற அவர் கடின உழைப்பின் மூலம் தேர்வில் வெற்றி பெற்றார். மூத்த வழக்கறிஞர் பிரித்வி நாத் என்பவரிடம் உதவியாளராகப் பணியாற்றினார். 3 ஆண்டுகள் கழித்து தனது அண்ணன் நந்தலாலுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். தனது திறமை, ஆளுமைத் திறன் மூலம் வெகு விரைவிலேயே சிறந்த வழக்கறிஞராக அறியப்பட்டார்.
இளம் வயதில் பொருளாதார ரீதியான சிரமங்களை அனுபவித்த மோதிலால் பின்னாட்களில் செல்வச் செழிப்பில் திளைத்தார். தனது குடும்பத்தினர் வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைத்தார். நீச்சல் குளத்துடன் அலகாபாதில் மிகப் பெரிய மாளிகையை உருவாக்கினார்.
அடிக்கடி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவந்த மோதிலால், அந்நாடுகளில் வாங்கிய விலை உயர்ந்த கலைப் பொருட்கள் மாளிகையின் அறைகளை அலங்கரித்தன. அம் மாளிகையின் பெயர், ‘ஆனந்த பவன்’. அவரது உடைகள் லண்டனில் இருந்த பிரபல தையற்கலைஞர்களால் தயாரிக் கப்பட்டவை.
அவரது மகன் ஜவாஹர்லால் நேரு, மகள்கள் சரூப் (விஜயலட்சுமி பண்டிட்), கிருஷ்ணா ஆகியோர் வசதியான பின்புலத்துடன் வளர்ந்தனர். தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு வீட்டிலேயே கல்வி, குதிரையேற்றம் உட்பட பல விஷயங்களைத் தங்கள் குழந்தை களுக்கு அளித்தார் மோதிலால்.
தொடக்கத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து அரசியலில் ஈடுபடும் எண்ணம் மோதிலாலுக்கு இருந்ததில்லை. பிரிட்டிஷ் அரசின் தீமைகளை அவ ருக்கு எடுத்துச் சொல்லி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட வைத்தவர் அவரது மகன் ஜவாஹர்லால் நேரு தான். 1888-ல் இந்திய தேசிய காங் கிரஸில் இணைந்தார் மோதிலால். எனினும், 1905-ல் வங்கப் பிரிவினை யின்போதுதான் அவர் முழுமையாக அரசியலில் ஈடுபட்டார்.
1917-ல் அன்னிபெசன்ட் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், தீவிரமாக அரசியல் போராட் டங்களில் ஈடுபட்டார் மோதிலால். ஜவாஹர்லால் நேருவின் தூண்டுதலில் காந்தியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியின் எளிமையால் கவரப்பட்ட மோதிலால், தனது செல்வங்கள் அனைத்தையும் துறந்தார். 2 முறை காங்கிரஸ் தலை வராகப் பதவி வகித்தார். ஒத்துழை யாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர் அவர். உடல்நிலை மோச மானதைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார்.1931 பிப்ரவரி 6-ல் காலமானார்.