ரயில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டியின் ஒரு கட்டத்தை நிரப்ப யோசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பயணி. பதிலைக் கூறிவிட்டு, செல்பேசி அழைத்ததும் எழுந்து வெளியே வருகிறார் நம் கதாநாயகன்.
பேசி முடித்துப் பாக்கெட்டில் போட எத்தனிக்கும் சமயத்தில் தவறுதலாக முன்னால் நிற்கும் பயணியின் பேண்டில் கை படுகிறது. கண் முன்னேயே பிக்பாக்கெட்டா எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார் அப்பயணி. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.
ரயிலை விட்டு இறங்கியதும், பரிசோதகர் எல்லோரையும் விட்டுவிட்டு இவரிடம் மட்டும் டிக்கெட்டைக் காட்டச்சொல்கிறார். சிறிது தூரம் சென்று டாக்ஸி அருகில் நிற்பவரிடம், டிரைவர் என்று நினைத்து வண்டி வருமா என இளம்பெண்ணொருத்தி கேட்கிறாள். இது போல வரிசையாய் நடக்கும் சில சம்பவங்கள் அவரைக் காயப்படுத்துகின்றன.
எப்போதுமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெண்ணி வருந்துகிறார் அவர். அவமானமாய் உணர்ந்து கலங்கி நிற்பவரின் முன்னால் நடக்கும் அந்த சம்பவம், மனவோட்டத்தையும், அவரின் மீதேயான மொத்த மதிப்பீடுகளையும் ஒற்றை நொடியில் தகர்த்தெறிந்து செல்கிறது. அப்படி என்ன நடந்தது? விடை, குறும்படத்தில்!
</p><p xmlns="">குறைவான வசனங்களில் சொல்ல வந்தது நிறைவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆழ்ந்து ஒலிக்கும் இசை பார்ப்பவர்கள் மனதின் வழி ஊடுருவித் தாங்கவியலாப் பாரமொன்றை இறக்கி வைத்து விட்டுச் செல்கிறது.</p><p xmlns="">எப்போதுமே, நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்ற நினைப்புதான் நம்மை அதிகம் அலைக்கழிக்கிறது; காயப்படுத்துகிறது. சுய பரிசோதனை தேவையோ என்று எண்ண வைக்கிறது.</p><p xmlns="">வாழ்க்கையை நாம் பார்க்கும் பார்வையின் மூலமே மகிழ்ச்சிகரமானதாக மாற்றிக் கொள்ள முடியும். நாம் எல்லோருமே நம் மனசைத்தான் முதலில் செல்ஃபி எடுக்க வேண்டும். தகுந்த காட்சியமைப்புகளோடு, தன்னை உணர்தலை மென்மையாய் உணர்த்துகிறது ஆகாஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட செல்ஃபி குறும்படம்.</p>