சிறந்த தத்துவ ஆசிரியர், பேச்சாளர், எழுத்தாளரான ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி (Jiddu Krishnamurti) பிறந்த தினம் இன்று (மே 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மெட்ராஸ் மாகாணம் மதனப்பள்ளியில் (தற்போது ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ளது) 1895-ல் பிறந்தார். இவரது தந்தை பிரிட்டிஷ் காலனி நிர்வாகத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். இவருக்கு 10 வயது இருந்தபோது தாய் இறந்துவிட்டார்.
l குடும்பம் 1903-ல் கடப்பாவில் குடியேறியது. பலவீனமானவன், கற்பனை உலகில் சஞ்சரிப்பவன், அறிவுக்கூர்மை இல்லாதவன் என்று உறவினர்களும் அக்கம்பக்கத்தினரும் சிறு வயது முதலே இவரை விமர்சித்தனர்.
l 1907-ல் ஓய்வு பெற்ற அப்பாவுக்கு சென்னை அடையாறில் உள்ள தியசாபிகல் சொசைட்டியில் கிளார்க் வேலை கிடைத்தது. அதன் தலைவராக இருந்த அன்னிபெசன்ட் அம்மையார் சிறுவனிடம் மிளிர்ந்த ஆன்மிகத் தேடல் அறிகுறிகளையும் திறனையும் உணர்ந்தார். அவனை தத்தெடுத்துக்கொண்டார்.
l அமைப்பின் சார்பில் கல்வியும், பல்வேறு நாடுகளில் சிறப்பு பயிற்சிகளும் பெற்றார். ‘அனைத்துலக ஆசான்’ என்று அறிமுகப்படுத்தப்பட்ட இவர், தியசாபிகல் அமைப்பின் எதிர்காலத் தலைவராகவும் அறிவிக்கப்பட்டார். குண்டலினி யோக முறையைக் கற்றுத் தேர்ந்தார்.18 வயதில் வினோதமான அனுபவங்கள் ஏற்படத் தொடங்கின.
l மொழிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தத்துவம், ஆன்மிகம் குறித்துப் பேசவும் எழுதத் தொடங்கினார். வாழ்வியல், தியானம், தேடல், மனித உறவுகள், சமூக மாற்றம், மனம், சிந்தனை, விடுதலை ஆகியவை குறித்து உலகம் முழுவதும் ஏராளமான கூட்டங்களில் பேசினார்.
l தி ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் ஃப்ரீடம், தி ஒன்லி ரெவல்யூஷன், கிருஷ்ணமூர்த்தீஸ் நோட்புக் உள்ளிட்ட அவரது நூல்கள் மிகவும் பிரசித்தம். இவரது உரைகள், உரையாடல்களில் பெரும்பாலானவை புத்தகங்களாக வந்துள்ளன.
l வெளி உலகில் தோன்றவேண்டிய மலர்ச்சியைவிட மனிதனின் மனத்தில் மலர்ச்சி தோன்றுவதே முக்கியம் என்றார். புரட்சி என்பது மத, அரசியல், சமூக ரீதியான வெளிமுக மாற்றம் அல்ல. அகத்தில் இயல்பான மறுவடிவம் பெறுதல்தான் புரட்சி என்றார்.
l இவர் 1922-ல் பலமுறை ஆன்மிக விழிப்புணர்வு நிலை அடைந்ததாகவும் அந்த அனுபவங்கள் இவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டதாகவும் கூறப்படுகிறது. தான் ஒரு தனிமனிதனாக மாறவேண்டும் என்ற உணர்வை இவரது அனுபவங்கள் தந்தன. எல்லாவிதமான தளைகளில் இருந்தும் விடுபட முடிவு செய்தார்.
l அறக்கட்டளைகள், அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வெளியேறினார். 1929-ல் ‘அனைத்துலக ஆசான்’ பட்டத்தையும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையும் துறந்தார். ‘நான் யாருக்கும் குருவாக இருக்க விரும்பவில்லை. எந்த அமைப்புக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமாக இருந்தால்தான் என்னால் சுதந்திரம் பற்றிப் பிறருக்குக் கூறமுடியும்’ என்றார். கடவுள், கோயில், புனித நூல்கள், சாதியம், மொழிப்பற்று உள்ளிட்ட அனைத்துமே மனிதகுல ஒருமைப்பாட்டுக்கு எதிரானவை என்றார். மத மாற்றம், கொள்கை மாற்றம் என்பதெல்லாம் மனித குலத்துக்கு எந்த நன்மையும் செய்யப் போவதில்லை என்றும் கூறினார்.
l மனிதகுல மேம்பாட்டுக்காக தனது பேச்சாலும், எழுத்தாலும் முக்கியப் பங்காற்றிய ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி 91 வயதில் (1986) மறைந்தார்.