இந்தியத் திரையுலகின் சிறந்த பின்னணிப் பாடகர்களில் ஒருவரான மன்னா டே (Manna Dey) பிறந்த தினம் இன்று (மே 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மேற்கு வங்க மாநிலத்தில் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தில் பிறந்தார் (1919). இவரது இயற்பெயர், பிரபோத் சந்திரா டே. இந்து பாபர் பாடசாலையில் ஆரம்பக் கல்வியும், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி பள்ளியில் உயர்நிலை கல்வியும் கற்றார். வித்யாசாகர் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றார்.
l சிறு வயதில் குத்துச் சண்டையில் சிறந்து விளங்கினார். தனது தந்தையின் சகோதரரும் இசையமைப்பாளருமான கே.சி.டேவிடம் கொண்ட தாக்கத்தால் இவருக்கும் இசையில் ஆர்வம் பிறந்தது. அவரிடமும் உஸ்தாத் தாபீர் கானிடமும் இந்துஸ்தானி இசையை முறைப்படிக் கற்றார்.
l கல்லூரிகளுக்கு இடையேயான பல இசைப் போட்டிகளில் முதல் பரிசுகளை வென்றார். முதலில் சிறிய அளவிலான கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பாடி வந்தார். 1942-ல் மும்பை சென்று சச்சின் தேவ் பர்மனிடமும், பின்னர் மற்ற இசையமைப்பாளர்களிடமும் உதவியாளராக பணிபுரிந்தார்.
l செம்மீன் திரைப்படத்தில் ‘மானச மைனே வரூ’ என்ற பாடல் மூலம் தென்னிந்திய திரையிலகில் பிரபலமானார். அதே ஆண்டில் ‘தமன்னா’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தித் திரையுலகில் அறிமுகமானார்.
l கவாலி, இந்துஸ்தானி சங்கீதம், மெல்லிசை, துள்ளலிசை என அனைத்து பாணி இசையிலும் தனது தனி முத்திரையைப் பதித்தவர். தனது வசீகரக் குரலால் மக்களின் மனங்களைக் கவர்ந்ததால் இவர் ‘மன்னா டே’ என்று அழைக்கப்பட்டார். முகம்மது ரஃபி, முகேஷ், கிஷோர் குமார் ஆகியோர் புகழேணியின் உச்சியில் இருந்த காலகட்டத்தில்தான் இவரது திரையுலகப் பிரவேசம் நிகழ்ந்தது.
l கடும் முயற்சியாலும், பயிற்சியாலும், மேதைமையாலும் இந்தித் திரையுலகில் இவர் தனக்கென்று தனி இடம் பிடித்தார். “மற்ற புகழ்பெற்ற பாடகர்களைபோல மன்னா டேயால் பாட முடியும், ஆனால் இவர் பாடிய பாடல்கள் எல்லாவற்றையும் அவர்களால் பாட முடியுமா என்பது சந்தேகம்தான்” என்று இசையமைப்பாளர்களின் பிதாமகன் என்று போற்றப்பட்ட எஸ்.டி. பர்மன் கூறியுள்ளார்.
l “மன்னா டேதான் எனது ஆதர்சப் பாடகர்” என்று முகம்மது ரஃபி கூறியுள்ளார். இந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்டார்களாகத் திகழ்ந்த ராஜ் கபூர், தர்மேந்திரா, ராஜேஷ் கன்னா ஆகியோருக்கான பாடல்களைப் பாடும் வாய்ப்பை மிகவும் குறுகிய காலத்துக்குள் பெற்றார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.
l 60 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த இவரது இசைப் பயணத்தில் இவர் பாடிய பாடல்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட் பாடல்கள். உலகம் முழுவதும் இசைப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். உப்கார், மேரா நாம் ஜோக்கர், பாபி, ஷோலே உள்ளிட்ட பல பிரபல திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார்.
l வங்காளம் தாய்மொழி என்றாலும் இந்தி, வங்காளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 16 மொழிகளில் 4000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். பத்மஸ்ரீ, பத்மபூஷண், தாதாசாகேப் பால்கே விருது என பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
l “இசையைத் தவிர எனக்கு வேறு எதுவுமே தெரியாது” என்று கூறியுள்ள இவர், காலத்தால் அழியாத பல அமரகீதங்களைப் பாடியுள்ளார். அந்தப் பாடல்கள் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இன்றும் நீங்கா இடம்பெற்றுள்ள மன்னா டே, 2013-ம் ஆண்டில் 94-ம் வயதில் காலமானார்.