அமெரிக்க கடல்சார் உயிரியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், எழுத்தாளரான ரேச்சல் லூயிஸ் கார்சன் (Rachel Louise Carson) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம் ஸ்பிரிங்டேல் நகரில் விவசாயக் குடும்பத்தில் (1907) பிறந்தார். புத்தகங்கள் வாசிப்பதில் சிறு வயதிலேயே ஆர்வம் கொண்டிருந்தார். மிருகங்கள் சம்பந்தப்பட்ட சிறுகதைகளை 8 வயதில் எழுதத் தொடங்கினார். 11 வயதில் இவர் எழுதிய கதை, ‘செயின்ட் நிகோலஸ்’ என்ற பத்திரிகையில் வெளிவந்தது.
l உயர்நிலைப் பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். உயிரியல் பட்டப்படிப்பில் சேர்ந் தார். கல்லூரியில் மாணவர் களுக்கான பத்திரிகையில் தனது படைப்புகளை வெளியிட்டார்.
l ஆய்வுக் கூடத்தில் பகுதிநேரமாக வேலை செய்துகொண்டே கடல்வாழ் உயிர்ச்சூழல் பற்றிய முனைவர் ஆய்வைத் தொடர விரும்பினார். தந்தையின் திடீர் மறைவால் குடும்பச் சுமை இவர் தோள்களில் விழுந்தது.
l விஞ்ஞானி மேரி ஸ்காட் சிங்கர் உதவியுடன் அமெரிக்க மீன்வளத் துறையில் தற்காலிக வேலை கிடைத்தது. 1936-ல் அரசுத் தேர்வு எழுதி முழுநேர ஊழியரானார். அங்கு 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். ‘அண்டர் தி ஸீ விண்ட்’ என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதிவந்த இவர் ஒரு பதிப்பகம் கேட்டுக்கொண்டதால் 1941-ல் அதை ஒரு புத்தகமாக எழுதினார்.
lபின்னர், பதிப்பகத்தின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். கடல்வாழ் வியல் பற்றிய தனது கட்டுரைகளை வானொலியிலும் வாசித்தார். மக்கள் இதை விரும்பிக் கேட்டனர். 1951-ல் வெளிவந்த இவரது ‘தி ஸீ அரவுண்ட் அஸ்’ என்ற புத்தகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஆவணப் படமாக தயாரிக்கப்பட்டு, ஆஸ்கர் விருதை வென்றது.
l பணம், புகழ், விருதுகள் தேடி வந்தன. பணியில் இருந்து விலகி முழுநேர எழுத்துப் பணி, ஆராய்ச்சிகளில் மூழ்கினார். அறிவியல் இதழ்களில் இவர் எழுதிய ‘தி எட்ஜ் ஆஃப் தி ஸீ’, ‘சம்திங் அபவுட் தி ஸ்கை’ ஆகிய தொடர்கள் பல லட்சம் வாசகர்களைப் பெற்றுத் தந்தன. பல பல்கலைக்கழகங்கள், அறிவியல் அமைப்புகளில் உரையாற்றினார்.
l செயற்கை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால் சில பறவைகள், மண்புழுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்று 1957-ல் ஆராய்ச்சியில் கண்டறிந்து அறிவித்தார். இதனால், வியாபாரிகளின் கண்டனத்துக்கு ஆளானார்.
l 4 ஆண்டுகள் கடுமையாக உழைத்து பூச்சிக்கொல்லிகளால் மண், தாவரம், உயிரினங்கள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார். இதன் அடிப்படையில் இவர் எழுதிய ‘சைலன்ட் ஸ்பிரிங்’ என்ற நூல் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ஒரே வருடத்தில் பல லட்சம் பிரதிகள் விற்பனையாயின.
l புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோதும், பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான போராட்டத்தை இவர் நிறுத்தவே இல்லை. அதன் விளைவாக, ஆபத்து விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டன.
l இயற்கை, சுற்றுச்சூழலைக் காக்க கடைசிவரை போராடிய ரேச்சல் கார்சன் 57 வயதில் (1964) மறைந்தார்.