வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1913 மே 1: மே தினத்தில் பிறந்த தெலங்கானா புரட்சியாளர்

சரித்திரன்

இந்திய வரலாற்றில் சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்த பல எழுச்சிகள் நடந்துள்ளன. அதில் முக்கியமானது 1946 ஆண்டு‍ முதல் 1951 அக்டோபர் வரை நடந்த தெலங்கானா விவசாயிகளின் போராட்டம். 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவில் 3 ஆயிரம் கிராமங்களில் வாழ்ந்திருந்த சுமார் 30 லட்சம் விவசாய மக்களின் எழுச்சி இது. இந்த எழுச்சியின் நாயகராக இருந்த பி.சுந்தரய்யா இதே தினத்தில் 1913-ம் வருடம் பிறந்தார். ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள அழகின்படு கிராமமே அவரது ஊர்.

பணக்காரக் குடும்பத்திலும் ஆதிக்க சமூகத்திலும் பிறக்க நேரிட்ட அவர், தனது பள்ளிப் பருவத்திலேயே சமூகப் பிரச்சினைகளுக்காகவும் ஏழை மக்களுக்காகவும் போராடினார். சென்னையின் லயோலா கல்லூரியில் மாணவராக இருந்தபோது அவரை, இந்திய கம்யூனிச இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான அமீர் ஹைதர்கான் சந்தித்தார். அவரது கருத்துகளால் கவரப்பட்ட சுந்தரய்யா தென்னிந்தியாவின் கம்யூனிச இயக்கத்தின் அமைப்பாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியோடு இணைந்து செயல்பட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

நாட்டின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952-ல் நடந்தது. சுந்தரய்யா சென்னை மாகாணத்திலிருந்து நாடாளுமன்ற மேலவைக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய நிறுவனர்களில் அவரும் ஒருவர். அதன் பொதுச்செயலாளராக நீண்டகாலம் இருந்தார். உலக அளவில் பல தலைவர்களோடு தொடர்புகொண்ட தலைவராக திகழ்ந்தார். ‘தெலங்கானா ஆயுதப்போராட்டமும் அதன் படிப்பினைகளும்’ என்ற அவரது நூல் பெரும் விவாதத்தை கிளப்பியது.

கட்சியைத் தனது நோக்கத்துக்கு ஏற்ற வகையில் கொண்டுசெல்ல இயலாத நிலையில் அவர் தனது அகில இந்திய கட்சிப் பதவிகளை ராஜிநாமா செய்தார். தனது பணிகளை ஆந்திர மாநிலத்துக்குள் மட்டும் வைத்துக்கொண்டார். ஆந்திராவின் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்ட பெரும் தலைவர் ஆனார். ஆந்திரத்தின் சட்ட மன்றத்துக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தென்னிந்தியாவில் கம்யூனிச இயக்கத்தை கட்டுவதில் பெரும் பங்காற்றிய அவர், உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் 1985-ம் ஆண்டு மே மாதம் 19-ம் தேதி அதிகாலையில் உயிர் நீத்தார்.

SCROLL FOR NEXT