மாநிலத்திலும் தேவையான எண்ணிக்கையில் முதியோர் இல்லங்களை அந்தந்த மாநில அரசுகள் அவசியம் தொடங்க வேண்டும் என்று 2007-ம் ஆண்டின் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புக்கான சட்டத்தில் வலியுறுத் தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சட்டம் அமல்படுத்தப்படும் தொடக்க காலங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் ஒரு முதியோர் இல்லத்தையாவது அரசு தொடங்க வேண்டும். குறைந்தது 150 பேர் தங்கக் கூடிய அளவில் வசதிகள் நிறைந்ததாக அந்த இல்லங்கள் இருக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட் டுள்ளது.
தமிழகத்தில் இதுவரை எந்த மாவட்டத்திலும் அதுபோன்ற அரசு முதியோர் இல்லம் தொடங்கப் பட்டதாகத் தெரியவில்லை. அரசு முதியோர் இல்லங்கள் தொடங்குவது உள்பட இந்த சட்டத்தின் பல்வேறு அம்சங்களை அமல்படுத்துவது தொடர்பாக மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ராம்பிரபு ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, இந்த விவகாரம் பற்றி ஆராய என்.எஸ்.பொன்னையா, ஜி.பிரபு ராஜதுரை மற்றும் டி.லஜபதிராய் ஆகியோரைக் கொண்ட வழக்கறிஞர்கள் குழுவை அமைத்தது.
முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் மட்டுமே 50 ஆயிரத்துக்கு மேல் உள்ள மதுரை மாவட்டத்தில், அரசு முதியோர் இல்லம் எதுவும் இல்லை. மாறாக தனியாரால் சுமார் 60 இல்லங்கள் நடத்தப் படுகின்றன. அவற்றில் 25 இல்லங்கள் பதிவு செய்யப்படாதவை என்று வழக்கறிஞர்கள் குழு கண்டறிந்தது.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அரசு முதியோர் இல்லம் தொடங்குவது, மருத்துவமனை யில் முதியோருக்கு தனிப் பிரிவு அமைப்பது, ஒவ்வொரு மாவட்டத்திலும் முதியோர் பிரச்சினை கள் குறித்த புகார்களைப் பெற 24 மணி நேர இலவச தொலைபேசி வசதி ஏற்படுத்துவது என்பது உள்பட பல பரிந்துரைகளை அந்தக் குழு வழங்கி யிருந்தது. இலவச தொலைபேசி வசதி மற்றும் அரசு முதியோர் இல்லங்கள் இருக்குமானால் ஆதரவற்ற முதியோர்கள் சாலையோரத்திலும், பஸ், ரயில் நிலையங்களிலும் தஞ்சம் அடையும் பரிதாப நிலை தடுக்கப்படும்.
இந்த வசதிகள் எல்லாம் ஏற்படுத்தப்பட வேண்டும் என 2007-ம் ஆண்டிலேயே சட்டத்தில் கூறப்பட் டிருந்தாலும், நீதிமன் றம் உத்தரவிட்டாலும் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த தாமதம் ஏற்படுகிறது. வயதானவர்களைப் பாதுகாத்துப் பராமரிப் பதில் அரசுக்கு இருக்கும் பொறுப்பு, கடமை குறித்து 2007-ம் ஆண்டின் பெற்றோர், மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த அம்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பரவலாக விழிப்புணர்வு ஏற்பட்டால் மட்டுமே, அந்த சட்டம் முழுமையாக அமல்படுத்தப்படுவதும் சாத்தியமாகும்.