ஜெர்மனியைச் சேர்ந்த மெய்யியலாளரும், ஜெர்மன் ஐடியலிஸத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவருமான ஜோஹன் கோட்லீப் ஃபிஸ்டா (Johann Gottlieb Fichte) பிறந்த தினம் இன்று (மே 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l ஜெர்மனியின் பவுட்சன் பகுதியில் ஏழ்மையான நெசவாளர் குடும்பத்தில் (1762) பிறந்தார். ஆரம்பக் கல்வியை தந்தையிடமே கற்றார். சிறு வயதிலேயே அறிவுக்கூர்மை மிக்கவராக, அபார நினைவாற்றல் படைத்தவராகத் திகழ்ந்தார்.
l முழு படிப்புச் செலவையும் நிலப்பிரபு ஒருவர் ஏற்றுக்கொண்டதால், பிரபலமான பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் பெற்ற கல்விதான் சுய சிந்தனைக்கும் சுய பரிசோதனைக்கும் வழிகோலியது. இது பின்னாளில் அவரது தத்துவக் கோட்பாடுகள், எழுத்துகளில் பிரதிபலித்தன.
l ஜேனா இறையியல் கல்லூரியில் 1780-ல் சேர்ந்தார். நிதியுதவி அளித்த நிலப்பிரபு இறந்ததால் கல்லூரிப் படிப்பைத் தொடர முடியவில்லை. ஜூரிச்சில் சில ஆண்டுகள் மாணவர்களுக்கு டியூசன் எடுத்தார். மெய்யியலாளர் இமானுவேல் கன்ட் பற்றி ஒரு மாணவர் சந்தேகம் எழுப்ப, அவரது படைப்புகளை தேடிப் படிக்கத் தொடங்கினார். அது இவரது வாழ்வில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.
l ‘கான்டியன்’ தத்துவங்கள் இவருக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கவனத்தை ஈர்க்கத் திட்டமிட்டார். தீவிரமாக முயன்று ஒரு நூலை எழுதி பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டார். பலரும் இது இமானுவேல் கன்ட் எழுதிய புத்தகம் என்று தவறாக நினைத்தனர்.
l இந்த புத்தகத்தால் பெரிதும் கவரப்பட்ட கன்ட், இதை எழுதியது யார் என்பதை வெளியிட்டதோடு அதில் அடங்கியுள்ள விஷயங்களையும் அதன் ஆசிரியரையும் வெகுவாகப் புகழ்ந்தார். தத்துவ உலகில் மற்றுமொரு புதிய நட்சத்திரமாக ஃபிஸ்டா புகழப்பட்டார். அங்கிருந்து லெய்ப்சிக் நகருக்கு வந்தார்.
l ஜேனா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அபாரமான சிந்தனைத் திறனும் பேரார்வமும் கொண்ட இவர், தான் ஆராய்ந்து கண்டறிந்த ஆழ்நிலை கருத்தியல் கோட்பாட்டை விளக்கினார். மிகச் சிறந்த பேராசிரியர் என்று புகழ்பெற்றார். பெரும்பகுதி நேரத்தை எழுத்துப் பணிக்காகவே செலவிட்டார்.
l தொடர்ந்து பல படைப்புகளை வெளியிட்டார். இவரது படைப்புகளில் நாத்திகவாதம் வெளிப்படுவதாகவும், எழுத்து நடை கடினமாக இருப்பதாகவும் கருத்துகள் எழுந்தன. இவரோ தன் படைப்புகள் வெளிப்படையானவை என்றும், பாரபட்சம் இல்லாமல் படித்தால் தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என்றும் வாதிட்டார்.
l மனிதன் சுதந்திரமாக, சுயச்சார்புடன் வாழவேண்டும். பெண்களுக்கு குடியுரிமை, சொத்துரிமை வழங்கப்பட வேண்டும். தந்தை, கணவனின் அதிகாரத்தில் இருந்து அவர்கள் முற்றிலுமாக விடுபட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
l பெர்லின் உட்பட பல நகரங்களிலும் ஏராளமான கூட்டங்களில் உரையாற்றினார். 1810-ல் பெர்லின் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது அதன் முதல்வராகவும் முதல் தத்துவவியல் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். ஜெர்மனியின் மெய்யியல் கருத்துகளில் புதிய கோட்பாடுகளுக்கு வித்திட்டவர்களில் ஒருவர் என்று புகழப்பட்டார்.
l பிரக்ஞை (self-consciousness) பற்றிய நுட்பமான கருத்துகளுக்காக பெரிதும் மதிக்கப்பட்டார். மனிதகுல உயர்வுக்காக எழுத்துப் பணி வாயிலாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஃபிஸ்டா 52 வயதில் (1814) மறைந்தார்.