பிரித்விராஜ் கபூர், திலிப் குமார், மதுபாலா நடித்த ‘மொகல்-ஏ-ஆஸம்’ (1960) படத்தை இந்தியர்களால் மறக்கவே முடியாது. சர்வ வல்லமை படைத்த பேரரசர் அக்பரின் மகன் சலீமின் காதலியான அனார்கலி, அக்பர் முன்னிலையிலேயே துணிச்சலுடன் ‘ப்யார் கியா தோ டர்னா க்யா?’ (காதல் செய்வதில் அச்சம் எதற்கு?) என்று பாடி ஆடும் பாடலைக் கேட்பவர்கள் / பார்ப்பவர்கள் புல்லரித்து நிற்பார்கள். அந்தப் படத்துக்கு மிகச் சிறந்த இசையமைப்பைத் தந்தவர் நவ்ஷாத். இந்தியத் திரையிசையில் வேறுபட்ட கலாச்சாரக் கூறுகளைக் கொண்ட இசை மரபுகளைப் புகுத்தியவர். மேற்கத்திய இசைக் கோவைகளைத் திரையிசைக்கு அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவர். பல்வேறு சிறப்புகள் அவருக்கு உண்டு.
உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவில் 1919 டிசம்பர் 25-ல் பிறந்தார் நவ்ஷாத். அவரது தந்தை வாஹித் அலி நீதிமன்றத்தில் முன்ஷியாகப் பணிபுரிந்தார். இளம் வயதிலேயே இசை நவ்ஷாதை ஆட்கொண்டுவிட்டது. உஸ்தாத் குர்பத் அலி, உஸ்தாத் யூசுஃப் அலி போன்ற இசை மேதைகளிடம் இந்துஸ்தானி இசையைக் கற்றார் நவ்ஷாத். அந்தக் காலகட்டத்தில் மவுனப் படங்கள்தான் வெளியாகின. படங்களை முன்பே பார்த்துவிட்டு அதற்கேற்றவாறு இசையை உருவாக்கி, திரைப்படம் ஓடும்போது திரையரங்கிலேயே இசைக் குழு வாசிக்கும். அந்த இசைக் குழுக்களில் பங்கேற்ற நவ்ஷாத், பிற்காலத்தில் திரைப்படங்களுக்குப் பின்னணி இசையமைப்பதில் மிகச் சிறந்தவராகப் பரிமளித்தார்.
1937-ல் மும்பை சென்ற நவ்ஷாத், உஸ்தாத் முஷ்டாக் ஹுசேன், கேம்சந்த் பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர் களிடம் பணிபுரிந்தார். 1940-ல் வெளியான ‘பிரேம் நகர்’ அவரது முதல் படம். ‘நயி துனியா’, ‘ஷாரதா’ போன்ற படங்களுக்கு இசையமைத்த நவ்ஷாத், 1944-ல் வெளியான ‘ரத்தன்’ படத்தின் மூலம் புகழின் உச்சியை அடைந்தார். 1957-ல் அவர் இசைய மைத்த ‘மதர் இந்தியா’தான் ஆஸ்கர் விருது பரிந்துரைக்கு அனுப்பப்பட்ட முதல் இந்தியப் படம். 1960-ல் ‘மொகல்-ஏ-ஆஸம்’ படம் வெளி யானது. மொகலாயப் பேரரசர்களின் காலத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் இசையை அந்தப் படத்துக்கு தந்தார் நவ்ஷாத். பல ஆண்டுகளுக்குப் பின்னர், அக்பர் கான் இயக்கிய ‘தாஜ் மஹல் - அன் எடெர்னல் லவ் ஸ்டோரி’ (2005) எனும் படத்துக்கு வரலாற்றுப் பின்னணி கொண்ட பாடல்களையும் பின்னணி இசையையும் தந்தார். 2006 மே 5-ல் மும்பையில் காலமானார். மொத்தமே 100 படங்களுக்கும் குறைவாகவே இசையமைத்தவர் என்றாலும், அவருக்கு இணையான இசைக் கலைஞர்கள் அரிது என்பதில் சந்தேகமில்லை.