வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1988 மே 15: ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது சோவியத்!

சரித்திரன்

அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையிலான பனிப்போர் உலகப் பிரசித்தம். இந்தப் பனிப்போரின் ஒரு பகுதியாக, கடும் பாதிப்பைச் சந்தித்த நாடு ஆப்கானிஸ்தான். உலகின் பலம்மிக்க இரண்டு நாடுகளின் படைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்ட நாடு அது. 1970-களில் ஆப்கானிஸ்தானில் கம்யூனிஸ்ட் சார்பு அரசு ஆட்சிசெய்தது. அந்நாட்டின் பிரதமர் ஹசிபுல்லா அமின், மேற்கத்திய பாணியில் ஆப்கானிஸ்தானைக் கொண்டுசெல்ல வேண்டும் எனும் ஆசை கொண்டவர். இஸ்லாம் மதத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட பெரும்பான்மை மக்கள் இதை ஏற்கவில்லை.

அப்போது முஜாஹிதீன் படைகளில் சேர்ந்த மக்கள், அரசுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டனர். ஆமின் அரசைக் கவிழ்க்கத் திட்டமிட்டனர். இந்தச் சமயத்தில் ஆப்கானில் அமைதியைக் கொண்டுவருவதாகக் கூறி, 1979-ல் அந்நாட்டுக்குள் நுழைந்தது சோவியத் ஒன்றியம். ஆமினின் அழைப்பின் பேரிலேயே இவ்விஷயத்தில் தலையிடுவதாக சோவியத் கூறியது.

இதற்கிடையே 1979 டிசம்பர் 27-ல் ஆமின் சுட்டுக்கொல்லப்பட்டார். சோவியத் ஒன்றிய அரசுக்கும் அவருக்குமான உறவில் ஏற்பட்ட முரண் காரணமாக அவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்குப் பின்னர், பப்ராக் கமால் என்பவர் பிரதமராகப் பதவியமர்த்தப்பட்டார். அதன் பின்னர், முஜாஹிதீன்களுக்கும் சோவியத் ஒன்றியப் படைகளுக்கும் இடையிலான சண்டை தொடர்ந்தது. ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தின் நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடுமையாக விமர்சித்தன.

ரஷ்யாவிலிருந்து உணவு தானிய இறக்குமதியை அமெரிக்கா தடை செய்தது. அத்துடன் 1980-ல் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியையும் அமெரிக்கா புறக்கணித்தது. முஜாஹிதீன் படைகளுக்குப் பெருமளவு ஆயுத உதவியை வழங்கவும் அமெரிக்கா தவறவில்லை. இதற்கிடையே பல ஆண்டுகள் நடந்த போர் காரணமாக சோவியத் ஒன்றியத்தின் பொருளாதார நிலை பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு மக்கள் கருதத் தொடங்கினர். வியட்நாம் மீதான படையெடுப்பு எவ்வாறு பல வகைகளில் அமெரிக்காவுக்குப் பின்னடைவைத் தந்ததோ அதேபோல் ஆப்கானிஸ்தான் மீதான போர் காரணமாக சோவியத் ஒன்றியத்துக்கு உள்நாட்டிலேயே கடும் நெருக்கடி ஏற்பட்டது. 15,000 ரஷ்ய வீரர்கள் இப்போரில் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்தன. ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்தது.

8 ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களை எதிர்த்துப் போர் புரிந்த சோவியத் ஒன்றிய ராணுவம் 1988 மே 15-ல் வெளியேறத் தொடங்கியது.

1988-ல் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற சோவியத் ஒன்றிய அதிபர் மிகையில் கோர்பச்சேவ் முடிவுசெய்தார். அதன் பின்னர், சில ஆண்டுகளில் தலிபான்களின் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்தது. 2001 செப்டம்பர் 11-ல் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கப் படைகள், அந்நாட்டைச் சின்னாபின்னமாக்கிவிட்டன. இன்று வரை ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிச் சத்தம் ஓய்ந்தபாடில்லை.

SCROLL FOR NEXT