வலைஞர் பக்கம்

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 30 - கல்லூரி விழா கலாட்டா

செய்திப்பிரிவு

எங்கள் பக்கத்து மாவட்ட தலைநகரில் உள்ள அரசுக் கல்லூரியில் மாணவர்களிடையே பேசுவதற்கு ஜெயகாந்தன் அழைக்கப்பட்டிருந்தார். ஜெயகாந்தனை கல்லூரி முதல்வர் வரவேற்று, தன்னுடைய பேராசிரியர்கள் சிலரையும் அறிமுகப்படுத்தி ஒரு தேநீர் உபசாரத்துக்குப் பிறகு, கூட்ட மேடை நோக்கி அழைத்துச் சென்றார்.

மேடையை சமீபிக்கும் வழியில் பார்த்துக்கொண்டே போனபோது, சில மாணவர்கள் நேராக நல்ல சுபாவமாகப் பார்த்தார்கள். இன்னும் சிலரிடத்து உள்விமர்சனம் கொண்ட பார்வைகள். கிசுகிசுவென்று உயர்மட்டக் குலாவல் பண்பில் ஆங்காங்கே சிறு கோஷ்டிகள் பேசிக் கொண்டிருந்தன.

ஜெயகாந்தனின் முகபாவம் தீவிரமாகயிருந்தது. சமநிலை சிறிது குலைந்த எந்தச் சூழ்நிலையிலும் அவர் முகம் இப்படித்தான் மாறும். அறிமுகப்படுத்தப்பட்டவர்களைத் தவிர்த்து மற்ற யாரையும் பார்க்காமல் நடந்தார் அவர். நாங்கள் அவரிடத்தில் இருந்து விலகிப் பார்வையாளர்கள் மத்தியில் எங்களுக்கு இடம் தேடிக் கொண்டோம்.

அந்தக் காலமே கொந்தளிப்பானதாகத்தான் இருந்தது. மாணவர் குழாம் என்பது, கொந்தளிக்கிற சமூகத்தின் குமிழ்கள் போல் இருந்தன. சமூகத்தில் சமநிலை என்பது சுரண்டலை நீத்த அங்கங்களிடையேதான் சாத்தியம். இந்த உண்மை அறியப்படாமல், எங்கும் கிளர்ச்சியும் அவை பற்றிய விவாதங்களும் எழுந்து சமூகம் கலங்கிக்கொண்டிருந்தது. பயில்வோருக்கு இருக்க வேண்டிய விநயம் மட்டும் அல்லாமல், குருசீட உறவின் சமநிலையும் குலையும் அளவுக்குக் கலாசாலைகள் குலுக்கப்பட்டன. மாணவர்கள் ஆணையிடுவதும் பேராசிரியர்கள் தண்டனை பெறுவதும் விருந்தினர்கள் எள்ளப்படுவதும் அரசாங்கங்கள் பணிவதுமாகக் காட்சிகள் கவிழ்ந்து விழுந்துகொண்டிருந்தன.

அப்பேர்ப்பட்ட காலம் அது!

முதல்வர் பேச ஆரம்பித்தபோது, அவர் உரை பற்றிய விமர்சனமும் அங்கே கூடவே ஆரம்பித்துவிட்டது. அவர் சொல்கிற விஷயத்துக்கு அடிவெட்டுகள் விழுவது அவ்வப்போது உரத்த குரலிலேயே கேட்டன. அவர் இது பற்றி அவமதிப்பு உணர்ச்சி கொண்டார் இல்லை. கொண்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்பது அவர் அனுபவம் போலும்! எப்பொழுதேனும் இரு கை உயர்த்தி அப்பாவி போல அவர்களை அமைதிப்படுத்தினார். அதையும் கூட இங்கிதமாக ஒரு புன்னகையுடன்தான் செய்தார். ஆனால், பேசி முடித்துவிட்டு உட்கார்ந்ததும் அவருக்கு முகம் என்னவோ அழுவது போல் ஆகிவிட்டது.

அப்புறம் ஒரு பேராசிரியர் பேசினார். அவர் ஒவ்வொரு முறை சிறிது நிறுத்தியதும், மாணவர்களிடம் இருந்து, ‘’அண்ட்… அண்ட்…’’ என்று அவ்வப்போது அவருக்கு சொல் விநியோகம் செய்யப்பட்டது. அவரும் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டவர் போல், ‘’அண்ட்… ஐ வாண்ட் டு ஸே…’’ என்று தொடர்ந்து பேசினார். இறுதியில் அவரை கும்மி தட்டி உட்கார வைத்தார்கள்.

அப்புறம் ஜெயகாந்தன் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டதும், அவர் எழுந்தார். மாணவர்கள், நவீன நாகரிகத்தின் முதல் அலையையே தங்கள் மேல் வாங்கித் தரித்துக்கொண்டவர்கள் ஆயினும், அவர்களும்கூட வியந்து ரசிக்கும் வண்ணம் ஜெயகாந்தன் அன்று ஒரு சரித்திரச் சாயல் கொண்ட உடையைத் தரித்திருந்தார். எழுந்து நின்றதே கம்பீரமாக இருந்தது.

சில நொடிகள், அவர் எழுந்து நின்ற பிரசன்னத்தில் அரங்கு பூரா வும் அமைதியாயிற்று. அப்போது தான், எல்லோரையும் திடுக்கிட வைப்பதாக அது நடந்தது. படபடவென்று வரிசையாக வெடிச் சத்தம் கிளம்பி மண்டபமே அதிர்ந்து, உட்கார்ந்து இருந்தவர்களின் ஒழுங்கெல்லாம் ஒருங்கே குலைந்தன.

அரங்குக்கு உள்ளேயே ஒரு பெஞ்சின் அடியில் நீளமான பட்டாசுச் சரம் வெடிக்கப்பட்டிருந்தது. அது பட்டாசுதான் என்று உணரப்படுவதற்கு உள்ளான நேரத்தில், எல்லோரும் என்னவோ ஏதோ என்று திகைத்துப் போயினர். ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் மாணவர்களின் குபீர் சிரிப்பு பரவியது.

பிரதிநிதிகள் குழுவில் உள்ள மாணவர்களுக்கு எதிராக, பொதுவாக எல்லாக் கல்லூரிகளிலும் இருப்பதான எதிர்ப்புக் குழுவின் செயல்பாடு இதுவென்று சீக்கிரத்தில் விளங்கியது.

வெடிச் சத்தம் கேட்டதும் ஜெயகாந்தன் அசந்து போகாமல், தாடை இறுக, புருவங்கள் உஷாராக, முகம் பூராவும் கோபத்தின் கனல் பரவ, தன்னை அறைகூவிய அந்தத் திசையை நோக்கினார். அவர் கரங்கள் இரண்டும் எதற்கோ தயாராக இடுப்பின் மீது சென்று பதிந்தன. தீவிரப்பட்டதோர் யுத்த முனைப்பு கண்ணில் தெரியலாயிற்று.

அப்போது மாணவர்களின் வேரொரு பிரிவினரிடம் இருந்து ஒரு குரல் எழுந்தது.

‘’வேட்டு முழக்கத்தோடு வரவேற்கப்பட்டீர்கள். பேசுங்கள்!’’

யாரோ ஒரு புத்திசாலி மாணவன் விஷயத்தை ஓர் அழகிய உருகொடுத்து மாற்றி, பட்டாசு வெடித்தவர்களை, அவர்கள் எதிர்பாராத ஒரு நிராசையில் தள்ளினான்! அந்த சமத்காரம் எவ்வாறோ அந்நேரத்திலும் ஜெயகாந்தனின் முகத்தில் ஒரு புன்னகை வரக் காரணமாயிற்று. கண்டனமும் ஏளனமும் கலந்ததொரு கண் பார்வையில் வெடியோசை வந்த திசையை மன்னித்துவிட்டு, ஜெயகாந்தன் மேலே பேசலானார்...

- தொடர்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள - pisakuppusamy1943@gmail.com

SCROLL FOR NEXT