வலைஞர் பக்கம்

கந்த முருகேசனார் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

இலங்கையில் உபாத்தியாயர் என்றும் தமிழ்த் தாத்தா என்றும் அழைக்கப்பட்ட சிறந்த தமிழ் அறிஞர் கந்த முருகேசனார் (Kantha Murukesanar) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள தென் புலோலியில் ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் (1902) பிறந்தவர். தட்டாதெரு மெதடிஸ்த மிஷன் தமிழ் பாடசாலையிலும், புலோலி ஆண்கள் ஆங்கிலப் பாடசாலை என்று அழைக்கப்பட்ட வேலாயுதம் மகா வித்யாலயத்திலும் கற்றார்.

l வறுமை காரணமாக தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஈழமணி ஆசிரியர், புலவர் என்று அழைக்கப்பட்ட முருகேசப் பிள்ளையிடம் கந்தபுராணம், நன்னூல் காண்டிகையுரை ஆகியவற்றைக் கற்றார். பின்னர் நன்னூல் யாப்பிலக்கண காரிகை போன்ற சிற்றிலக்கண நூல்களையும் தொல்காப்பியம் போன்ற பேரிலக்கண நூல்களையும் யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே கற்றார்.

l தற்போது புற்றளை மகா வித்யாலயம் என்று குறிப்பிடப்படும் புற்றளை சாரதா வித்யாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றினார். 25 வயதில் இவரது கால்கள் வலுவிழந்தன. கோயில்களில் சமயச் சொற்பொழிவுகள் ஆற்றிய தனக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற விரக்தியில் நாத்திகவாதியாக மாறினார்.

l சிறந்த சிந்தனையாளராக மாறி, பொதுவுடைமைத் தத்துவங்கள், வாழ்க்கைத் தத்துவங்களைக் கற்றறிந்தார். இவர் குடியிருந்த வீடான ‘தமிழகம்’ ஒரு திண்ணைப் பள்ளிக்கூடமாக மாறியது. இயற்கைச் சூழலில், வெண் மணற்பரப்பில் இப்பள்ளிக்கூடம் பாலர் வகுப்பு முதல், பண்டிதர், வித்வான் வகுப்பு வரை முன்னேறியது. எப்போதும் மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

l இங்கு தமிழ் மட்டுமன்றி சமயம், தர்க்கம், புவியியல், கணிதம் ஆகியவையும் கற்பிக்கப்பட்டன. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கிய இவரே அனைத்தையும் கற்பித்தார்.

l மக்கள் எல்லோரும் சமமானவர்கள். இதில் உயர்வு தாழ்வு என்ற பேதம் இல்லை என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு அதை செயல்படுத்திக் காட்டியவர். இதற்கு எதிர்ப்பு வந்தபோதும், கொள்கையில் உறுதியாக நின்றார். ஒடுக்கப்பட்டவர்கள், கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கும் பள்ளியில் இடம் தந்தார். ஏழை மாணவர்கள் பலர் இலவசமாக இவரது பள்ளியில் தங்கி தமிழ் கற்று வித்வான், பண்டிதர் என பட்டங்கள் பெற்றனர்.

l அபார நினைவாற்றல், கற்பனை வளம், தளராத நம்பிக்கை கொண்டவர். நாத்திகவாதியாக இருந்தாலும், சமயப் பாடங்களை ஆழ்ந்த ஞானத்துடனும் நுட்பமாகவும் மாணவர்களுக்கு போதிப்பார். வசீகரத் தோற்றம் கொண்ட இவர் ‘கிரேக்க ஞானியைப் போலக் காட்சியளிக்கிறார்’ என்பார் தமிழ் அறிஞர் கணபதி பிள்ளை.

l அறிஞர் அண்ணா உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களோடும், தமிழ்ப் புலவர்களுடனும் நேரடியாகவும் தபால் மூலமும் தொடர்பு கொண்டிருந்தார். இவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். ஏராளமான தமிழ் இலக்கியச் செய்யுள்கள், ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

l மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும். அதுவே தமிழர் பண்பாடு என்பதை வலியுறுத்திய இவர், மெய்ஞானத் துறவியாக வாழ்ந்து காட்டினார். மனிதர்களிடம் மட்டுமன்றி, விலங்குகளிடமும் அன்பு பாராட்டி பராமரித்தார்.

l தலைசிறந்த தமிழ்ப் புலவர். உபாத்தியாயர், தமிழ்த் தாத்தா, சீர்திருத்தவாதி, ஞானக்கடல் என்றெல்லாம் போற்றப்பட்ட கந்த முருகேசனார் 63 வயதில் (1965) மறைந்தார்.

SCROLL FOR NEXT