ஆர். நல்லகண்ணு:
தனது சிறுவயதிலேயே ஜெயகாந்தனுக்கு கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமான உறவுண்டு. அவரது தாய் மாமா புருசோத்தமன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பாண்டிச்சேரி சுப்பையா ஆகியோரால் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்தவர் ஜெயகாந்தன். பள்ளிப் படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லாமல், 5-ம் வகுப்போடு போதுமென்று படிப்பை விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்து சேர்ந்தார்.
அப்போது சென்னை பிராட்வேயிலுள்ள மினர்வா டேவிட்சன்ஸ் தெருவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகம் இருந்தது. ஜெயகாந்தன் அங்கேதான் தங்கியிருந்தார். அப்போதெல்லாம் நல்ல துடிப்புடன் காணப்படுவார் ஜெயகாந்தன். அப்புறம் ஆனந்த விகடன், தாமரை, சரஸ்வதி இதழ்களில் வந்த ஜெயகாந்தனின் சில கதைகளைப் படித்தேன். அப்போது ஜெயிலில் இருந்துவிட்டு வந்ததால் நான் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருப்பேன். என் இறுக்கத்தை ஜெயகாந்தனின் பல கதைகள் உடைத்து எறிந்தன.
ஜெயகாந்தனுடன் அவருடைய கதைகள் பற்றி விவாதிப்பேன். அவரும் ஆர்வமாக நான் சொல்வதைக் கேட்பார். சரி என்றால் கேட்டுக்கொள்வார். இல்லையென்றால் தர்க்கரீதியாக விவாதிப்பார்.
கலை இலக்கியப் பெருமன்றத்தின் இலக்கிய செயல்பாடுகளில் நல்ல உத்வேகம் காட்டினார். அதன் மாநில நிர்வாகிகளில் ஒருவராக இருந்து, இலக்கியம் பற்றிய கருத்தைத் தெளிவாகவும், அதே நேரத்தில் உறுதியுடனும் பேசினார். கம்யூனிஸ்ட் தலை வர்கள் ஜீவானந்தம், பால.தண்டாயுதம், ஆர்.கே.கண்ணன், எஸ்ஆர்கே போன்றோரோடு கம்யூனிஸ்ட் சித்தாந்தம் குறித்தும், அதன் தாக்கம் குறித்தும் தீர்க்கமாய்ப் பேசுவார்.
சமூக மாற்றத்துக்கான புதிய சிந்தனைகளை விதைக்கும் களமாகத் தனது கதைக்களனை அமைத்துக்கொண்டு, அதில் மகத்தான வெற்றியையும் பெற்றவர். நவீன இலக்கியத்தோடு, பழந்தமிழ் இலக் கியத்தையும் வளரும் தலைமுறை படிக்க வேண்டுமென்பதை எப்போதும் சொல்லி வந்தவர் ஜெயகாந்தன். மேலோட்டமான வாசிப்பு அனுபவத்தைத் தராமல், படிப்பவர் நெஞ்சில் ஆழமாய்த் தைக்கக்கூடிய எழுத்துக்குச் சொந்தக்காரர் அவர்!
- மு. முருகேஷ்