மனுஷ்ய புத்திரன், கவிஞர்:
ஜெயகாந்தன் மறைந்தார். பாரதிக்கு பிறகு எழுத்தாளன் என்பவனுக்கு ஒரு ஆகிருதியை கொடுத்தவர் ஜெயகாந்தன். தமிழ் எழுத்தின் மகத்தான அடையாளம் மறைந்தது.
விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையை ஊடுருவிச் சென்றது போலவே உயர் வகுப்பினரின் வாழ்வியல் போராட்டங்களுக்குள்ளும் அதே உக்கிரத்துடன் தன் படைப்பு மொழியை செலுத்தியவர். துணிச்சலாக எழுதியது போலவே அதே துணிச்சலுடன் எழுதுவதையும் நிறுத்திக்கொண்டவர்.
எழுதாதபோதும் அவர் மீது இருந்த ஒளி மங்கவே இல்லை. ஜெயகாந்தனைப்போல வாழ்நாளிலேயே தனிப்பட்ட முறையில் ஆராதிக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளன் தமிழில் இல்லை.
அவர் தனக்கான ஒரு கல்ட்டை உருவாக்கினார். ஒரு ஆசானின் மறைவுக்கு முன்னால் நின்றுகொண்டிருப்பது போன்ற கையறு நிலை வேறு எதுவும் இல்லை.
*
பழனி பாரதி, கவிஞர்:
ஒரு முறை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தேன்...
''பாரதி...
பாரதிக்குப் பிறகு?
புதுமைப்பித்தன் !
புதுமைப்பித்தனுக்குப் பிறகு?
நான்!''
அவர் இன்று இல்லை...
அந்தக் குரல்
எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும்...
அது... சத்தியத்தின் குரல்!