வலைஞர் பக்கம்

பணம் கொடுத்து வாங்க முடியாத படைப்பாளி! - நடிகை லட்சுமி

செய்திப்பிரிவு

நடிகை லட்சுமி:

முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம். நிறைய விஷயங்களை எழுத்தில் கொடுத்து விட்டு நீங்கியதால் அவரது மறைவை நான் இழப்பாக நினைக்கவில்லை. ஜெயகாந்தன், பொதுவாக நடிகர்- நடிகைகள் வீட்டுக்குப் போக மாட்டார். “அவர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது” என்பார். என் வீட்டுக்கு வந்தபோது, “என்னைப் பார்க்க வந்திருக்கீங்க?” என்றேன் ஆச்சரியமாக. “உன்னிடம் நிறையப் பேசலாம். அதெல்லாம் கிடக்கட்டும், முதலில் நீ அந்த வீணையை எடுத்து வாசி” என்றார் உரிமையோடு. எப்போதும் பேச்சுதான் அவர் மூச்சு.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ படப்பிடிப்பின் போதும், ‘பாரீசுக்குப் போ’ கதையைத் தொலைக்காட்சித் தொடருக்காக எடுத்த நாட்களிலும் ஒரு சின்ன இடைவெளி கிடைத்தாலும் அவர் அருகில் போய் அமர்ந்துகொள்வேன். புதிய சிந்தனைகள் எல்லாம் வார்த்தைகளாக வந்து விழுந்துகொண்டே இருக்கும். இன்றைக்கு எனக்குள் இருக்கும் தைரியம், கோபம், தெளிவு எல்லாமே அவரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.

கோபம் வரும் நேரத்தில் மீசையை முறுக்கிக்கொண்டு கத்துவார். அந்தக் கோபத்தின் முடிவில் ஒரு குழந்தையாக மாறுவதை அருகில் இருந்து பார்த்தவர்கள்தான் உணர்ந்திருப்பார்கள். தனக்குள் இருக்கும் உணர்வை வெளிப்படுத்தாமல் இருப்பவன், எப்படி உண்மையான கலைஞனாக இருக்க முடியும்? ஜேகே-வின் கோபத்தை நான் அப்படித்தான் பார்க்கிறேன். அசலான கலைஞன் அவர்.

கதையில் இருக்கும் காட்சி ஒன்றைப் படமாக்க வேண்டாம் என்று இயக்குநர் முடிவெடுத்தால், அவ்வளவு எளிதில் விட மாட்டார். எடுத்தே தீர வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒருகட்டத்தில் இயக்குநர் பீம்சிங், “அவர் சொல்கிற காட்சிகளை எல்லாம் எடுத்துவிடுங்கள். பிறகு, எடிட்டிங் செய்யும்போது புரியவைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார். தன்னுடைய வார்த்தைகளில் அவ்வளவு பிடிவாதம். ஆனால், முழுப் படம் எடுக்கப்பட்ட பிறகு, அவர் சொன்ன காட்சி தேவையற்றது என்று சொல்லி அவர் மனதில் பட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொள்வார். அதுதான் அவரது தனித்தன்மை.

ஒருமுறை, “ஏன் லட்சுமி, ‘கங்கை எங்கே போகிறாள்?’ கதையைப் படமாக எடுத்தால் என்ன?” என்று கேட்டார். அடுத்த நிமிடமே, “வேண்டாம்… விட்டுவிடுவோம், கதையாக நல்லாத்தானே இருக்கு?” என்றார். இது சரியாக வராது என்று முடிவெடுத்தால், அவ்வளவுதான், அதில் மாற்றமே இருக்காது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் இருந்து அவரை உற்றுக் கவனித்துக்கொண்டே இருப்பேன். இவர் பெரிய பதவியில் இருக்கிறார், அவர் பணக்காரர், இவர் ஏழை என்றெல்லாம் அவரிடம் எந்தப் பாரபட்சத்தையும் பார்க்க முடியாது. அவரைப் பொறுத்த அளவில் எல்லோரும் சமம். அவரைப் பணம் கொடுத்து வாங்க முடியாது. “நல்லவன்னு பேரு வாங்குறது முக்கியமில்லை; நல்லவனா இருக்கிறதுதான் முக்கியம்” என்பார். அப்படித்தான் வாழ்ந்தார்!

- ம.மோகன்

SCROLL FOR NEXT