வலைஞர் பக்கம்

புத்தகக் குறிப்புகள்: ரஃபி குரலை ரசிக்கத் திரண்ட லட்சம் பேர்

பால்நிலவன்

ரஃபியின் பாடலைக் கேட்க ஒரு லட்சத்து இருபதினாயிரம் பேர் திரண்ட தகவலைத் தெரிவிக்கிறது சி.எஸ். தேவநாதன் எழுதிய 'வரலாறு படைத்த மாமனிதர்கள்' என்ற நூல்.

இந்தி பாடகர் முகம்மது ரஃபியின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமல்ல சிறந்த பறவையியல் ஆராய்ச்சியாளரான சலீம் அலி உள்ளிட்ட அறிஞர்கள், தலைவர்கள் எனப் பலரின் வாழ்க்கை வரலாற்றையும் இந்நூலில் தெரிந்துகொள்ள முடிகிறது.

கல்வியாளர் சர் சையது அகமத்கான், பள்ளி ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த டாக்டர் ஜாகீர் உசேன், புகழ்பெற்ற உருதுக் கவிஞர் முகம்மது இக்பால், ஓவியர் எம்.எப்.உசேன், அப்துல் கலாம் என இஸ்லாமிய சமுதாயத்தின் உன்னத மனிதர்களைப் பற்றி தனித்தனி அத்தியாயங்களில் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.

வரலாறு படைத்துச் சாதிக்க விரும்புவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமையும்.

இந்நூலில் இடம்பெற்றுள்ள இந்திப் பாடகர் முகம்மது ரஃபி பற்றிய வரலாறு நம் நெஞ்சையள்ளும் பகுதியாக அமைந்துள்ளது. நூலாசிரியர் சி.எஸ்.தேவநாதனின் எழுத்துக்களிலிருந்து சிற்சில பகுதிகள் இங்கு பகிரப்படுகிறது:

ராஜ்கபூரும் ஷம்மிகபூரும் தங்கள் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். முகம்மது ரஃபியின் பாட்டுக்கு ஷம்மிகபூர் வாயசைத்து 'தில் கேதே தேகோ' . 'ஆன் ஈவ்னிங் இன் பாரீஸ்', 'அந்தாஸ்', 'ஸமீர்' போன்ற படங்கள் பெருவெற்றி பெற்றன.

காலத்தோடு பொருந்திக்கொள்ளக் கூடியவர் ரஃபி. நௌஷாத், ஓ.பி.நய்யார் போன்ற இசையமைப்பாளர்களுக்கு ஒரு கட்டத்தில் பாடினார் என்றால், நவீன காலத்துக்கேற்ப அனுமாலிக், பப்பி லஹரி, ராஜேஷ் ரோஷன், ரவீந்திர ஜெயின் போன்றவர்களுக்கும் மற்றொரு கட்டத்தில் அவர் பாடியிருக்கிறார்.

1961ல் லட்சுமிகாந்த் பியாரிலால் இசையில் முதல் முதலாகப் பாடினார். அவர்கள் அதிகம் பழகியிருக்கவில்லை. அந்நிலையில் லட்சுமிகாந்த் அவரிடம் வந்து, 'இந்தப் படத்தில் (சைலாபாபு) நீங்கள் ஒரு கஸல் பாடித்தர வேண்டும். தயாரிப்பாளர் விருப்பம் ஆனால் உங்களுக்குக் கொடுக்க அவரிடம் போதிய பணம் இல்லையே என்று வருத்தப்படுகிறார் நீங்கள் அதைப் பாடினால் நன்றாக இருக்கும்' என்று கேட்டுக்கொண்டார்.

ரஃபி மனமுவந்து அந்த கஸலைப் பாடிக்கொடுத்தார். படத் தயாரிப்பாளர் கூச்சத்துடன் ஆயிரம் ரூபாய் தந்தார். ரஃபி அந்த ரூபாயை மறுக்காமல் பெற்று, அப்படியே லட்சுமிகாந்த் கையில் கொடுத்துவிட்டார். 'போங்கள், இந்த ரூபாய்க்கு ஸ்வீட் வாங்கி வரச் சொல்லுங்கள். உங்கள் இசையமைப்பு ரொம்ப அருமை. நாம் அதைக் கொண்டாடுவோம்' என்றார். அப்போதிருந்து லட்சுமிகாந்த் பியாரிலால் ரஃபியுடன் தொடர்ந்து இருபது ஆண்டுகள் பணியாற்றியிருக்கின்றனர்.

பணம் பெரிதில்லை அவருக்கு. அவர் தொடக்க காலத்தில் வெறும் எழுபது ரூபாய்க்கு பாடினார். பிரபலமாகி புகழின் உச்சத்தில் இருந்தபோது ஒரு பாட்டுக்கு இருபதினாயிரம் ரூபாய் வாங்கினார். 'லோ பட்ஜெட்' படங்களுக்கும் அவர் பாடிக் கொடுத்திருக்கிறார்.

அவர்கள் கொடுத்த சொற்பத் தொகையையும் முகம் சுளிக்காமல் பெற்றுக்கொண்டார். சக கலைஞரான கிஷோர்குமாரின் சொந்தப் படத்தில் பாட அழைப்பு வந்தது. ஒற்றை ரூபாயை மட்டும் சம்பளமாக ஏற்றுக்கொண்டு பாடிக் கொடுத்தார்.

ரஃபி வெளிப்படையாகப் பேசுவார். ஆனால் அது யாருடைய மனதையும் புண்படுத்துகிற மாதிரி இருக்காது. அவருடைய நேர்மையும் பெருந்தன்மையும் வியக்கத்தக்கது. மற்ற பாடகர்கள் கையாளத் தயங்குகிற பாடல்களை அவர் ஏற்றுப்பாடுவார்.

ஒரு சமயம் நடிகரும் பின்னணிப் பாடகருமான கிஷோர் 'ஷாத்திமேரா சாத்தி' படத்தில், ஒரு பாடல் தவிர்த்து மற்ற பாடல்களை கிஷோர் குமாரே பாடிமுடித்துவிட்டார். அந்த ஒரு பாடலை ரஃபி மட்டுமே பாட முடியும் என்று கூறிவிட்டார்.

ரஃபியின் மைத்துனரும் மேனேஜருமான ஸகீர், 'ஒருவர் வேண்டாமென்று மறுத்ததை நீங்கள் பாட வேண்டுமா?' என்று தடுத்தார். ஆனால் ரஃபி அந்தப் பாட்டை பாடவே செய்தார். 'எனக்குப் பாடுவதில் ஈடுபாடு. மற்றது பற்றி என்ன?' சொல்லிவிட்டார். 'ராகினி' என்ற படத்தில் கிஷோர்குமாருக்கு ரஃபியே பின்னணி பாடியிருக்கிறார்.

1980-ல் ஒரு முறை அவர் கொழும்புவில் பாடச் சென்றிருந்தார். அந்த நாடும் (இலங்கை), அரசும் அவருக்களித்த வரவேற்பு அவரைச் சிலிர்க்க வைத்தது. அவர் மேடையில் பாடியதைக் கேட்க நாற்றிசையிலும் மக்கள் கூடியிருந்தனர். சுமார் ஒரு இலட்சத்தி இருபதினாயிரம் பேர் இருந்ததாய் சொல்லப்பட்டது. நிகழ்ச்சியின் இறுதிவரை பிரதமர் பிரேமதாசா உட்பட யாரும் அங்கிருந்து நகரவில்லை. ரஃபியின் குரல் மனிதர்களை அப்படி வசியப்படுத்தியிருந்தது. இப்படி உலக நாடுகள் பலவற்றிலும் அவர் பாடியிருக்கிறார்.

1980 ஆகஸ்டு 1-ல் முகம்மது ரஃபி மாரடைப்பால் இயற்கை எய்தினார். ரஃபி மேன்ஷன் நிசப்தமாகிவிட்டது. அவருடைய இரசிகர்கள் அவர் இறந்துவிட்டதை நம்பமுடியாது திகைத்துநின்றார்கள்.

ரஃபி காலமானபோது லட்சுமிகாந்த் (ரஃபியின் அதிக எண்ணிக்கையிலான பாடல்களுக்கு இசையமைத்தவர்) இவ்வாறு குறிப்பிட்டார்: ரஃபி சாஹேப் எங்களுடைய அருமையான பாடகர். இன்று அவர் போய்விட்டார். நாங்களும் எங்களுடைய இசையும் அனாதைகளானோம்.

நூல்: வரலாறு படைத்த மாமனிதர்கள்

நூல் ஆசிரியர்: சி.எஸ்.தேவநாதன், பக்.144 விலை: ரூ.90

நூல் வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்,

2, வடக்கு உஸ்மான் சாலை,

முதல் மாடி (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்),

தியாகராய நகர், சென்னை - 600 017

SCROLL FOR NEXT