இந்தியத் திரையுலகின் தந்தை என்று போற்றப்படும் தாதாசாஹேப் பால்கே (Dadasaheb Phalke) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l மகாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள த்ரயம்பகேஷ்வரில் (1870) பிறந்தார். இயற்பெயர் துண்டிராஜ் கோவிந்த் பால்கே. தந்தை சமஸ்கிருத நிபுணர். பேராசிரியராகப் பணிபுரிந்தவர்.
l பால்கே 1885-ல் மும்பை ஜே.ஜே.கலைக் கல்லூரியில் பல கலைகளையும் கற்றார். புகைப்படக் கலை, ஓவியம், சிற்பம், அகழ்வாராய்ச்சி குறித்து பரோடாவில் உள்ள கலா பவனில் 1890-ல் பயின்றார். லித்தோகிராஃபி அச்சுக்கலையில் நிபுணத்துவம் பெற்று, பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவுடன் இணைந்து பணியாற்றினார். கார்ல் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் மேஜிக் நிபுணரை சந்தித்து அவருடன் சில காலம் பணிபுரிந்தார். மேஜிக் ஷோக்கள் நடத்தினார்.
l அப்போது ‘கிறிஸ்துவின் வாழ்வு’ என்ற திரைப்படத்தைக் கண்டார். அதைப் பார்த்ததும் இவருக்கு சினிமா ஆர்வம் தொற்றிக்கொண்டது. பன்முகத் திறன் கொண்ட இவர், திரைப்படம் எடுப்பதை தன் லட்சியமாக வகுத்துக்கொண்டார். சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிகைகளை ஒன்றுவிடாமல் படித்தார். திரைப்படம் பார்ப்பதற்காகவே சினிமா கொட்டகையில் வேலை பார்த்தார். அப்போது, எல்லாமே மவுனப் படங்கள்தான். இடையிடையே அலுப்புத் தட்டாமல் இருக்க நாடகக் கலைஞர்கள், இசை வல்லுநர்கள் ஆகியோர் கதையை விளக்கிச் சொல்வார்கள்.
l திரைப்படம் பற்றி தெரிந்துகொண்டதும், சின்னச் சின்ன படங்கள் எடுத்துப் பழகினார். பிறகு இங்கிலாந்து சென்று வால்டன் ஸ்டுடியோவில் சினிமா தொழில்நுட்பம் கற்றார். பார்வை மங்கியதையும் பொருட்படுத்தாமல் சினிமா எடுப்பதில் ஆர்வம் காட்டினார்.
l அன்றைய காலகட்டத்தில் சினிமா தயாரிப்பது சுலபமானதாக இல்லை. நடிப்பதை பாவம் என்று கருதிய காலம். எதை எதையோ விற்று படம் எடுத்தார். குடும்பத்தினர், நண்பர்கள், தெரிந்தவர்களை நடிக்கவைத்தார்.
l பெண் வேடங்களுக்கு ஆண்களை நடிக்கவைத்தார். நடிப்பு இயல்பாக வரவேண்டும் என்பதற்காக அவர்கள் மற்ற நேரங்களிலும் சேலை கட்டியபடியே இருக்கவேண்டும், சமையல் வேலைகள் செய்யவேண்டும் என்று உத்தரவுகள் போட்டார்.
l சினிமா பற்றி தெரிந்தது அவர் ஒருவர்தான் என்பதால் எழுத்து, இயக்கம், கேமரா என எல்லாவற்றையும் அவரே மேற்கொண்டார். மனைவி அனைத்து விதங்களிலும் உதவினார்.
l ஒருவழியாக 1913-ல் இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படம் ‘ராஜா ஹரிச்சந்திரா’ வெளிவந்தது. இந்தியாவில் சினிமாவை அறிமுகப்படுத்திய முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். ஹிந்துஸ்தான் பிலிம் கம்பெனியை தொடங்கினார்.
l தனது 19 ஆண்டு சினிமா வாழ்க்கையில் மோஹினி பஸ்மாசுர், சத்யவான் சாவித்ரி, லங்கா தஹன் உள்ளிட்ட 95 திரைப்படங்கள், 26 குறும்படங்கள் தயாரித்துள்ளார். இவற்றில் பெரும்பாலானவற்றை அவரே இயக்கியுள்ளார்.
l வாழ்நாள் முழுவதையும் திரைப்படத்துக்காகவே அர்ப்பணித்த தாதாசாஹேப் பால்கே 74 வயதில் (1944) மறைந்தார். அவரது நினைவைப் போற்றும் வகையில், திரைத்துறை சாதனையாளர்களுக்கு இவரது பெயரிலான விருதை இந்திய அரசு 1969 முதல் ஆண்டுதோறும் வழங்கிவருகிறது. 1971-ல் இவருடைய உருவம் பொறித்த தபால் தலை வெளியிடப்பட்டது.