வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1934 ஏப்ரல் 3: சிம்பன்ஸிகளின் சிநேகிதி!

சரித்திரன்

உயிரியல் பூங்காக்களில் சிம்பன்ஸி குரங்குகளைப் பார்த்திருப்போம். கூண்டுக்கு வெளியே இருந்தபடி கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களைக் கவனிக்காமல், அமைதியாக அமர்ந்திருக்கும் அவற்றை சாதாரணமான உயிரினமாக நாம் கருதியிருக்கலாம். ஆனால் அன்பு, வெறுப்பு, பயம், குரூரம் என்று கிட்டத்தட்ட மனிதர்களைப் போலவே குணங்களைக் கொண்டவைதான் அவையும். சிறுவர்கள், தங்கள் தம்பிப் பாப்பா, தங்கைப் பாப்பாக்கள் மீது பொறாமை கொள்வதுபோல், தனது பெற்றோருக்குப் பிறக்கும் குட்டி மீது சிம்பன்ஸி குட்டிகள் பொறாமை கொள்ளும் என்பன போன்ற ஆச்சரியமளிக்கும் தகவல்கள்கூட உண்டு. இதுபோன்ற அரிய தகவல்கள் இன்று நமக்குக் கிடைக்கின்றன என்றால் அதற்கு மிக முக்கியக் காரணம் டேம் ஜேன் மோரிஸ் குடால். சுருக்கமாக ஜேன் குடால்.

பிரிட்டனின் தெற்குக் கடற்கரையோர நகரமான போர்ன்மவுத் நகரில் 1934 ஏப்ரல் 3-ல் பிறந்தார் குடால். அவரது தந்தை மார்ட்டிமர் ஹெர்பெர்ட் மாரிஸ் குடால் ஒரு தொழிலதிபர். தாய் மார்கரெட் ஜோசஃப் நாவலாசிரியர். ஜேன் குடாலுக்கு சிறுவயதிலிருந்தே வன விலங்குகள் மீது ஈர்ப்பு இருந்தது. மிருகங்களுடன் பேசும் திறன்கொண்ட டாக்டர் டூலிட்டில், வன விலங்குகளால் வளர்க்கப்பட்டு ‘காட்டு ராஜா’வாக வலம்வரும் டார்ஸான் ஆகிய கதைகள் சிறுமி ஜேனுக்குள், வன விலங்குகள் மீதும், காடுகள் நிறைந்த ஆப்பிரிக்கா மீதும் ஆர்வத்தை அதிகரித்தன.

இந்த ஆர்வம்தான் 1957-ல் கென்யாவில் பணியில் சேர வைத்தது. கென்ய பயணச் செலவுக்காக, உணவு ஊழியராக, அலுவலகங்களில் தனிச்செயலாளராக, அஞ்சலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து பணம் சேர்த்தார் ஜேன் குடால். கென்யாவில் இருந்தபோது, புதைபடிமவியல் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் மானுடவியல் நிபுணருமான லூயிஸ் லீக்கியின் அறிமுகம் கிடைத்தது. சிம்பன்ஸி, கொரில்லா, ஒராங்குட்டான் ஆகிய குரங்குகளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய, முறையே ஜேன் குடால், டயான் ஃபோஸி, பைருத் கால்டிகாஸ் ஆகிய 3 இளம் பெண்களையும் வழிநடத்தினார் லூயிஸ் லீக்கி (இந்த மூவர் அணிக்கு ‘ட்ரைமேட்ஸ்’ என்று செல்லப்பெயர் உண்டு!)

அந்த வகையில், தான்சானியா நாட்டின் ‘கோம்பே ஸ்ட்ரீம் நேஷனல் பார்க்’குக்கு அனுப்பப்பட்டார் ஜேன் குடால். அங்குதான் சிம்பன்சிகளைப் பற்றிய தனது ஆய்வை அவர் தொடங்கினார். அவற்றின் குணங்களை அறிவதற்காக அவற்றின் மத்தியிலேயே பல ஆண்டுகள் தங்கியிருந்தார். சிம்பன்ஸிக்கள் பற்றிய ஆராய்ச்சியில் அவருக்குக் கிடைத்த தகவல்கள் அறிவியல் உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தின. குறிப்பாக, சிம்பன்ஸிகள் குச்சிகளைப் பயன்படுத்தி எறும்புகளைப் பிடித்துத் தின்னும்; தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூட்டத்தின் மற்ற சிம்பன்ஸிகளைக் கொல்லும்; சில சமயம் தன் இனத்தையே கொன்று தின்னும் என்றெல்லாம் அவரது ஆராய்ச்சியில் தெரியவந்தது.

‘இன் தி ஷேடோ ஆஃப் மேன்’, ‘விஷன்ஸ் ஆஃப் காலிபான்’, ’புரூட்டல் கின்ஷிப்’, ‘பெர்ஃபார்மன்ஸ் அண்ட் தி எவலூஷன் இன் தி ஏஜ் ஆஃப் டார்வின்’ உள்ளிட்ட புத்தகங்களை ஜேன் குடால் எழுதியிருக்கிறார். மனிதர்கள் நோய்களுக்கான மருந்துகளைப் பரிசோதனை செய்ய, சிம்பன்ஸிக்கள் பயன்படுத்தப்படுவதைத் தொடர்ந்து குடால் எதிர்த்துவருகிறார்.

“மனிதர்களுக்கு வேண்டுமானால் ஆன்மா இருக்கலாம். ஆனால் சிம்பன்ஸிகளுக்கு ஆன்மா இருக்க வாய்ப்பே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை மனிதர்களுக்கு ஆன்மா இருந்தால், சிம்பன்ஸிகளுக்கும் நிச்சயம் ஆன்மா இருக்கும்” என்று ஜேன் குடால் கூறியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, சிம்பன்ஸிகளுடன் வாழ்ந்துவரும் உண்மையான ஆன்மாவின் குரல் அது!

SCROLL FOR NEXT