ஒரு எழுத்துலக சிங்கம் நிரந்தர ஓய்விற்கு சென்றுள்ளது. ஜெயகாந்தனின் எழுத்துக்களை என் கல்லூரி காலத்தில் தேடித் தேடிப் படித்தவன். அவர் எழுத்தில் உள்ள ஆழமும் கம்பீரமும் எந்த வாசகனையும் அதட்டல் போட்டு கை கட்ட வைக்கும்.
சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு வீடு, ஒரு மனிதன், ஒரு உலகம், உன்னைப் போல் ஒருவன், யாருக்காக அழுதான், பிரளயம் போன்ற அற்புதமான படைப்புகளைத் தந்தவர்.
அவர் ஒரு கர்வி என்று என்னிடம் சிலர் சொல்லும்போது.. 'இருக்கட்டுமே..அசாத்திய படைப்புகளைப் பிரசவிக்க அந்த குணம் அவருக்கு தூண்டுதலாக இருந்தால் அது சமூகத்திற்கு நல்லதுதானே' என்பேன்.
அவரின் மேடைப் பேச்சிலும் அந்த கம்பீரம் இருக்கும். ஒரு சமயம் ஒரு மேடையில் ஒரு வாசகர் 'இன்றைய பெண்களின் கற்புநிலை கவலை அளிக்கிறதே?' என்று கேட்டபோது அவர் ஒரே வார்த்தையில் 'நம்புங்கள்' என்று பதில் அளித்தார்.
சமீபத்தில் விகடன் நடத்திய விழாவில் அனைவரும் அவரைப் பாராட்டிப் பேசியதும் நன்றியுரை சொல்ல வந்தவர் 'நன்றி' என்று ஒரு வார்த்தை மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார். சிலருக்கு வாழும் காலத்தில் அங்கீகாரமும், மரியாதையும் கிடைக்காது.
ஆனால் ஜெயகாந்தனுக்கு உரிய மரியாதையும் அங்கீகாரமும் அவர் வாழ்ந்த காலத்திலேயே நிறைவாக அளிக்கப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.
அவர் தம் படைப்புகள் மூலமாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
- பட்டுக்கோட்டை பிரபாகர்,எழுத்தாளர்