விடுதலைப் போராட்ட வீரரும், புகழ்பெற்ற இந்தி இலக்கிய வாதியுமான பண்டிட் மாகன்லால் சதுர்வேதி (Pandit Makhanlal Chaturvedi) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 4). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
மத்தியப் பிரதேச மாநிலத் தின் பாபயீ கிராமத்தில் (1889) பிறந்தார். பள்ளி ஆசிரியராக 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறந்த பேச்சாளரும்கூட.
பல பத்திரிகைகளில் கவிதை, கட்டுரைகள் எழுதினார். திலகரின் ‘சுதந்திரம் எனது பிறப்பு ரிமை’ முழக்கமும் காந்தி யடிகளின் போராட்ட முறைகளும் இவருக்குள் விடுதலை வேட்கையைத் தூண்டின.
ஆசிரியர் பணியைத் துறந்து விடுதலை இயக்கத்தில் இணைந்தார். எழுத்துப் பணியையும் தொடர்ந்தார். ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். பலமுறை சிறை சென்றார்.
1910 முதல் பிரபா, கர்மவீர் உள்ளிட்ட பல்வேறு தேசிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். எளிமையான, உணர்ச்சிபூர்வமான இவரது எழுத்தாற்றல் மிகவும் பிரபலமடைந்தது. உத்வேகம் தரும் இவரது படைப்புகள் மக்களிடையே சுதந்திரக் கனலை எழுப்பின.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அரசாங்கப் பதவிகளில் அமர்வதற்கான வாய்ப்புகள் வந்தபோதிலும், பத்திரிகை, எழுத்துப் பணியிலேயே முழுமூச்சாக ஈடுபட்டார். சமூகக் கொடுமைகள், சுரண்டல்கள், ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்ற காந்திஜியின் கனவு நனவாக விரும்பியவர் அதுகுறித்து பேசியும் எழுதியும் வந்தார்.
இந்தி இலக்கிய ஆர்வலர்களால் ‘பண்டிட்ஜி’ என்று அன்போடு அழைக்கப்பட்டார். ‘ஒரு இந்திய ஆன்மா’ என்று பெருமையோடு போற்றப்பட்டார். ஹிம கிரீடினி படைப்புக்காக 1943-ல் ‘தேவ் புரஸ்கார்’ விருது பெற்றார். 1955-ல் இவரது ஹிம தரங்கிணி கவிதைத் தொகுப்பு இந்தி மொழிக்கான முதல் சாகித்ய அகாடமி விருதை வென்றது.
இவரது படைப்புகளான யுக சரண், சாகித்ய தேவதா, தீப் ஸே தீப் ஜலே, புஷ்ப கீ அபிலாஷா, கைஸா சந்த் பனா தேத்தீ ஹை, அமர் ராஷ்ட்ரா ஆகியவை இந்தி இலக்கிய உலகில் நீங்காப் புகழ்பெற்றவை.
‘ஆதிசக்தியே இவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறாள். இவரது நடையில் ஆகாய கங்கையின் சரளம் தெரிகிறது’ என்று பிரபல உருதுக் கவிஞர் ரகுபதி ஸஹாய் கூறியது இவரது எழுத்தாற்றலுக்கு சான்று.
சாகர் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கவிஞர், நாடக ஆசிரியர், கட்டுரையாளர், பேச்சாளர், பத்திரிகையாளர் என பன்முகத் திறன் கொண்ட மாகன்லால் சதுர்வேதி 79 வயதில் (1968) மறைந்தார்.
அவரை நினைவுகூரும் விதமாக ‘மாகன்லால் சதுர்வேதி புரஸ்கார்’ என்ற விருதை சிறந்த கவிஞர்களுக்கு மத்தியப் பிரதேச அரசு 1987 முதல் வழங்கி வருகிறது. வருடாந்திர கலாச்சார நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. ஆசியாவிலேயே முதன்முதலாக போபாலில் தொடங்கப்பட்ட ஊடகவியல், தகவல் தொடர்பியல் பல்கலைக்கழகத்துக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.