கி.வீரமணி,திக தலைவர்:
கடலூர் மோகன் சிங் வீதியில் எங்கள் வீடு இருந்தது. எதிரில் இருந்த அக்கிரகாரம் தெருவில் முருகேசன் வீடு இருந்தது. அங்கிருந்து சுமார் 10 வீடுகள் அடுத்து எங்கள் வீடு. அப்போது எனது பெயர் சாரங்கபாணி. முருகேசனின் வீட்டுக்கு எதிரிலேயே அவரது அத்தை சொர்ணத்தம்மாள் வீடு இருந்தது. அந்த வீட்டில் சொர்ணத்தம்மாள் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடம் நடத்திவந்தார். அந்தப் பள்ளிக்கூடத்தில்தான் எனது பள்ளிப் படிப்பு தொடங்கியது. அப்போது முருகேசன் எனது வகுப்புத் தோழன்.
இருவரும் அங்குள்ள தெருக்களில் ஒன்றாக சுற்றித் திரிவோம். அங்கு அய்யர் ஒருவருக்குச் சொந்தமான தோட்டம் ஒன்று அப்போது உண்டு. கிட்டிப்புள், கோலி, சடுகுடு எனப் பல சிறுவர்களின் விளையாட்டுக் களம் அதுதான். எங்களுக்கு என்னவோ அதில் நாட்டம் இல்லை. நாங்கள் இருவரும் அந்தத் தோட்டத்தில் உள்ள மரங்களில் ஏறி, உச்சியில் உள்ள கிளைகளில் அமர்ந்து மணிக் கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பல விஷயங்கள்பற்றிப் பேசுவோம்.
முருகேசனின் அப்பா தண்டபாணிப் பிள்ளை ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர். ரொம்பவும் கண்டிப்பானவர். அவரது ராணுவக் கண்டிப்பு வீட்டிலும் தொடரும். முருகேசனின் தாயார் மிகவும் அன்பானவர். எனக்கும் முருகேசனுக்கும் மிகவும் வாஞ்சையோடு உணவு பரிமாறுவார். தண்டபாணிப் பிள்ளையின் கண்டிப்பு முருகேசனுக்குப் பிடிக்கவில்லை. அந்த வயதிலேயே தந்தை சொல்லை மீற வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் ஏற்பட்டது. அதனாலேயே அவர் 5-ம் வகுப்புடன் பள்ளிப் படிப்பைத் துறந்தார்.
என்னுடைய 10 வயதில் அங்கு நடைபெற்ற திராவிட இயக்கக் கூட்டம் ஒன்றில் மேடையேறிப் பேசினேன். சாதி எதிர்ப்பு மற்றும் சுயமரியாதைக் கருத்துகளை முன்வைத்து அந்தக் கூட்டத்தில் நான் பேசிய பேச்சைப் பார்வையாளர்கள் எல்லோரும் கைதட்டி வரவேற்றனர். ஆனால், முருகேசன் எனக்கு எதிர்நிலையை எடுத்தார். எனக்கும் அவருக்கும் இடையே அப்போதே கொள்கை முரண்பாடு ஏற்பட்டுவிட்டது. நான் பள்ளிக்கூடம் செல்லும் நேரத்தில் முருகேசன் தன்னுடன் சில சிறுவர்களைச் சேர்த்துக்கொண்டு, “சாரங்கபாணி ஒழிக” என்றெல்லாம் முழக்கமிடுவார். பள்ளிக்கூடத்தில் படிக்கவில்லையே தவிர, கையில் கிடைத்ததையெல்லாம் படித்தார் முருகேசன். ‘கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ என்பதற்கு மிகச் சரியான உதாரணம் அவர்.
அதன் பிறகு வாழ்க்கைத் தடத்தில் இருவரும் வெவ்வேறு திசைக்குச் சென்றுவிட்டோம். சாரங்கபாணியான நான் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆனேன். முருகேசனாக இருந்த எனது இளம்பருவத் தோழன் தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆனார். பிற்காலத்தில் கொள்கைரீதியாக நாங்கள் எவ்வளவோ முரண்பட்டோம். எனினும், எங்கள் இருவருக்கும் இடையேயான ஆழ்ந்த நட்பில் எப்போதும் முரண்பாடு ஏற்பட்டதில்லை.
எந்த முரண்பாடுகளாலும் முறிக்க முடியாத எங்கள் உறவுப் பயணத்தை மரணம் பிரித்துவிட்டது. என்னுடைய இளவயதுத் தோழனை, என் முருகேசனை இழந்து, மீளாத் துயரில் நான் தவிக்கிறேன்!
- வி.தேவதாசன்