வலைஞர் பக்கம்

கவிதை: அவரவர் வலி

மு.முருகேஷ்

இடுப்பில் இருப்புக் கொள்ளாமல்

இறங்கத் துடிக்கிறாய்.

கைப்பிடித்து

உடன் நடக்காமல்

உதறிவிட்டு முன் ஓடுகிறாய்.

பேருந்துப் பயணங்களில்

மடியில் உட்காராமல்

தனியிருக்கை கேட்டு

அடம் பிடிக்கிறாய்.

ஊட்டிவிடும் உணவைக்

கீழே துப்பிவிட்டு,

நீயே இருகையிலுமள்ளி

மேலெல்லாம்

பூசிக் கொள்கிறாய்.

போட்டுவிடும் ஆடையைக்

கழட்டியெறிந்து,

நீயே ஒரு சட்டையை

மேல்கீழாய் மாற்றி

மாட்டிக் கொள்கிறாய்.

உடல் சோர்ந்து

லேசாய் கண்ணயரும் தருணத்தில்

சட்டென வீறிட்டு அழுது

தூக்கம் கலைக்கிறாய்.

மகளே...

தாயாயிருக்கிற

என் வலி நீ அறியாதிருக்கின்றாய்.

நானும் அறியாதிருக்கின்றேன்...

குழந்தையாய் இருக்கும்

உன் வலியை.

SCROLL FOR NEXT