வலைஞர் பக்கம்

அலி அக்பர் கான் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

உலகப் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக் கலைஞர், சரோட் வாத்தியக் கலைஞர் அலி அக்பர் கான் (Ali Akbar Khan) பிறந்த தினம் இன்று (ஏப்ரல்14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கிழக்கு வங்கத்தின் (தற்போதைய வங்கதேசம்) குமில்லா என்ற இடத்தில் (1922) பிறந்தவர். தந்தை அலாவுதீன் கான் ஒரு இசை மேதை. ரவிசங்கர் உள்ளிட்ட பல மேதைகளை உருவாக்கியவர். தந்தையிடம் 3 வயது முதல் இசை பயின்றார். மாமா ஃபகீர் அஃப்தாபுதீனிடம் தபேலா கற்றார்.

l தந்தை இவருக்கு பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக்கொடுத்தார். இறுதியாக சரோட் வாத்தியம், இந்துஸ்தானி இசையில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். தினமும் 18 மணி நேரம் சாதகம் செய்வார்.

l 13 வயதில் முதல் மேடை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 1938-ல் பம்பாய் ஆல் இந்தியா ரேடியோவில் இசை நிகழ்ச்சி நடத்தினார். லக்னோ வானொலி நிலையத்தில் 1940 முதல் மாதந்தோறும் இசை நிகழ்ச்சி நடத்திவந்தார். 1943-ல் ஜோத்பூர் மகாராஜாவின் அரசவைக் கலைஞராகப் பணியாற்றினார். மகாராஜா இவருக்கு ‘உஸ்தாத்’ என்ற பட்டத்தை வழங்கினார்.

l பம்பாய் ஹெச்எம்வி ஸ்டுடியோவுக்காக 1945-ல் இசைத் தட்டுகளை வெளியிட்டார். ஆந்தியான், தேவி உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

l அமெரிக்க வயலின் கலைஞர் யெஹுதி மெனுஹினின் அழைப்பை ஏற்று 1955-ல் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் மியூசியம் ஆஃப் மாடர்ன் ஆர்ட் என்ற இடத்தில் அற்புத இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்திய இசை இடம்பெற்ற முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

l அமெரிக்காவில் குடியேறினார். சிதார் இசை மேதை பண்டிட் ரவிசங்கருடன் இணைந்து மேற்கத்திய நாடுகளில் இந்திய இசையை பரப்பினார். அங்கு இவர் மூலம் 1960-களில் இந்திய இசை பிரபலமடைந்தது.

l 1956-ல் கல்கத்தாவில் இசைக் கல்லூரியை நிறுவினார். 1967-ல் கலிபோர்னியாவில் அலி அக்பர் இசைக் கல்லூரியைத் தொடங்கி அங்கு 33 ஆண்டுகள் இசை பயிற்றுவித்தார். சுவிட்சர்லாந்தில் இதன் கிளை செயல்படுகிறது.

l ஆசியா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, கனடா என உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். பல இசை ஆல்பங்களை வெளியிட்டார். பல இந்துஸ்தானி ராகங்களை உருவாக்கினார்.

l தாக்கா பல்கலைக்கழகம், கலிபோர்னியா கலைக் கல்லூரி ஆகியவை இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. 1997-ல் ஏஷியன் பண்டிட் சிரோமணி விருதைப் பெற்றார். பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.

l மாணவர்களிடம் மிகவும் கண்டிப்பாக நடந்துகொள்பவர் இவரது தந்தையும் குருவுமான அலாவுதீன் கான். அவரிடம் ‘ஸ்வர சாம்ராட்’ என்ற பட்டத்தைப் பெற்றது தன் வாழ்நாளில் கிடைத்த மாபெரும் கவுரவம் என்பார். இந்திய பாரம்பரிய இசையின் அடையாளங்களில் ஒருவராகப் போற்றப்படும் அலி அக்பர் கான் 87 வயதில் (2009) மறைந்தார்.

SCROLL FOR NEXT