முதல் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, ராயல் இந்திய கரன்சி மற்றும் நிதி ஆணையம் (ஹில்டன் யங் ஆணையம்) 1926-ல், ரிசர்வ் வங்கி அமைப்பதற்கான பரிந்துரையை அரசுக்கு அளித்தது. எனினும், 9 ஆண்டுகள் கழித்துத்தான், 1935 ஏப்ரல் 1-ல் ரிசர்வ் வங்கி தொடங்கப்பட்டது. ரிசர்வ் வங்கிச் சட்டம் (1934)-ன் படி ரிசர்வ் வங்கி அமைக்கப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் 1949 ஜனவரி 1-ல் ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. கொல்கத்தாவில் தொடங்கப்பட்ட இவ்வங்கி, பின்னர் மும்பைக்கு நிரந்தரமாக மாற்றப்பட்டது.
கவர்னர் தலைமையில், மத்திய நிர்வாக இயக்குநர்கள் அடங்கிய குழு ரிசர்வ் வங்கியை நிர்வகிக்கிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் செயல்படும் இவ்வங்கியின் பிராந்திய அலுவலகங்கள், பிராந்திய நிதி தொடர்பான விவகாரங்கள் மற்றும் பிராந்திய வங்கிகளின் எதிர் பார்ப்புகள் பற்றிய ஆலோசனைகளைத் தலைமைய கத்துக்கு வழங்கும். ரிசர்வ் வங்கியின் மத்திய மற்றும் பிராந்திய உறுப்பினர்கள் அரசால் தேர்ந்தெடுக்கப் படுவார்கள். அவர்களது பதவிக்காலம் 4 ஆண்டுகள்.
முதலில் கிழக்கிந்தியக் கம்பெனியின் ‘டபுள் மோஹர்’ சின்னத்தை (பனைமரமும் சிங்கமும் கொண்ட சின்னம்!) ரிசர்வ் வங்கியின் இலச்சினையாக வைக்கும் யோசனை இருந்தது. அதன்பின்னர், இந்தியாவின் தேசிய விலங்கான புலியின் உருவம் ரிசர்வ் வங்கியின் இலச்சினையில் வைக்கப்பட்டது.
(1942 முதல் 1945 வரை ஜப்பானின் ஆதிக்கத்தின்கீழ் பர்மா இருந்த காலகட்டத்தைத் தவிர) பர்மாவின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி செயல்பட்டிருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விடுதலை அடைந்த பின்னர், (ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தான் செயல்படத் தொடங்கியதற்கு முன்பாக) ஓராண்டுக் காலம் வரை பாகிஸ்தானின் மத்திய வங்கியாகவும் ரிசர்வ் வங்கி செயல்பட்டது.
ரிசர்வ் வங்கியின் முதல் கவர்னராகப் பதவியேற்றவர், சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித். இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் இருந்தார். அதன் பின்னர், சர் ஜேம்ஸ் பிரெய்டு டெய்லர் ரிசர்வ் வங்கியின் கவர்னராக 5 ஆண்டுகள் பதவி வகித்தார். அவருக்குப் பின்னர், 1943-ல் சர் சி.டி. தேஷ்முக் இப்பதவியில் அமர்ந்தார். ரிசர்வ் வங்கியின் கவர்னரான முதல் இந்தியர் அவர்தான். முன்னள் பிரதமர் மன்மோகன் சிங், 1982 முதல் 1985 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராகப் பொறுப்பு வகித்தவர். தற்போது, ரிசர்வ் வங்கியின் தலைவராக இருப்பவர் ரகுராம் ராஜன்!
இதன் முக்கியப் பணிகள், தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குவதில் மத்திய அரசுக்கு ஆலோசனை கூறுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்; இந்திய வங்கிகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல், கண்காணித்தல், கட்டுப்படுத்தல், வழிகாட்டல், வட்டி விகிதத்தை நிர்ணயித்தல், வங்கிகளின் பணக் கையிருப்பு விகிதத்தை முறைப்படுத்துதல்; நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்; இந்திய ரூபாய் நாணயம், ரூபாய் நோட்டுகள், முத்திரைத் தாள்களை அச்சிடல், விநியோகித்தல் ஆகியவை. மேலும், மத்திய, மாநில அரசுகளின் முதன்மை வங்கி யாகச் செயல்படுதல்; இந்தியாவின் பண நிலைத் தன்மையைப் பாதுகாக்கும் அளவுக்கு இருப்பு வைத்தல்; நாணயம் மற்றும் கடன் திட்டங்களை நாட்டின் சிறந்த நலனுக்காகச் செயல்படுத்துதல் போன்றவையும் ரிசர்வ் வங்கியின் முக்கியப் பணிகளாகும்.