ஜெர்மனியை சேர்ந்த பிரபல சிந்தனையாளர், தத்துவமேதை இமானுவேல் கன்ட் (Immanuel Kant) பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l பிரஷ்யாவின் கோனிக்ஸ்பர்க் (தற்போது ரஷ்யாவில் உள்ளது) நகரில் (1724) பிறந்தார். தந்தை கைவினைக் கலைஞர். தீவிர மதப்பற்று கொண்டிருந்த குடும்பம் அது. லத்தீன் மொழிக் கும் சமயக் கல்விக்குமே அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டது. ஹீப்ரு மொழியைக் கற்ற பிறகு எம்மானுவேல் என்ற தன் பெயரை இமானுவேல் என்று மாற்றிக்கொண்டார்.
l பள்ளிக் கல்வியை முடித்த பிறகு 1740-ல் கோனிக்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கிருந்த பகுத்தறிவாளரான ஆசிரியர் மார்ட்டின் நட்சென் என்பவரின் தாக்கம் இவருக்குள் ஆழமாக வேரூன்றியது. அங்கு தத்துவமும் கணிதமும் பயின்றார்.
l தந்தை 1746-ல் இறந்ததால் இவரது கல்வி தடைபட்டது. மாணவர்களுக்கு டியூஷன் எடுத்ததோடு, பல ஆய்வுகளையும் மேற்கொண்டார். ஒரு நண்பர் உதவியுடன் 1755-ல் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து, 1756-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
l அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக 15 ஆண்டுகள் பணியாற்றினார். பல தத்துவங்களையும் கற்றுத் தேர்ந்தார். ‘உண்மையான சிந்தனாவாதி’ என்று போற்றப்பட்டார்.
l அதன் பிறகு 1770-ல் தொடங்கி 27 ஆண்டுகளுக்கு தர்க்கம் மற்றும் மெய்ஞானவியல் பேராசிரியராக பணியாற்றினார். தனது பகுத்தறிவுக் கொள்கைகளால் மாணவர்களை பெரிதும் கவர்ந்தார். ஆனால், மத நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை போதித்ததால் ஆசிரியராகப் பணியாற்றவும், எழுதவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.
l இவரது முதல் தத்துவ நூலான ‘தாட்ஸ் ஆன் த ட்ரூ எஸ்டிமேஷன் ஆஃப் லிவிங் ஃபோர்ஸஸ்’ 1749-ல் வெளிவந்தது. இதைத் தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார். 1755-ல் பல்கலைக்கழக விரிவுரையாளராகப் பதவி ஏற்றார். அறிவியல் நூல்களை ஓரளவு எழுதினாலும், தத்துவ விஷயங்களிலேயே அதிக கவனம் செலுத்தினார்.
l அறிவு, அழகியல் குறித்தும் ஆராய்ந்தார். அழகியல் அணுகுமுறைக் கோட்பாட்டின் முன்னோடியாகத் திகழ்ந்தார். ‘ரொமான்டிசிஸத்தின் (மிகையுணர்ச்சிக் கோட்பாடு) தந்தை’ என்று அறியப்படுகிறார். உணர்தல், கற்பனை, அனுபவம், ஏக்கம் ஆகியவை இதன் அடிப்படைகளாகும்.
l சுய அனுபவம் மூலம் அறியப்படும் அறிவு, உண்மையான அறிவு என்பது இவரது கொள்கை. நவீன தத்துவத்தின் முக்கியத் தூணாக இவர் கருதப்படுகிறார். தத்துவவியல், ஒழுக்கவியல், அரசியல் தத்துவம், அழகியல் களங்களில் இவரது சிந்தனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
l பகுத்தறியும் தன்மை - மனித அனுபவம் ஆகிய இரண்டுக்குமான தொடர்பை விளக்க முற்பட்டார். தத்துவத் துறையில் தொடர்ந்து பல முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான புத்தகங்கள், கட்டுரைகளை வெளியிட்டார்.
l பெர்லின் அகாடமி பரிசு உட்பட பல பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். பல கல்வி நிறுவனங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவரது சிந்தனைகள் அடங்கிய ‘கன்ட்டியன் தத்துவம்’ (Kantian philosophy), பல பல்கலைக்கழகங்களில் பாடமாக கற்பிக்கப்படுகிறது. நவீன ஐரோப்பாவின் செல்வாக்கு படைத்த சிந்தனையாளராக விளங்கிய இமானுவேல் கன்ட் 80 வயதில் (1804) மறைந்தார்.