வலைஞர் பக்கம்

ஷேக் முஜிபுர் ரஹ்மான் 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

வங்கதேசத்தின் முதல் அதிபர் ‘வங்கபந்து’ ஷேக் முஜிபுர் ரஹ்மான் (Sheikh Mujibur Rahman) பிறந்த தினம் இன்று (மார்ச் 17). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 கிழக்கு வங்கப் பகுதியின் டோங்கிபுரா கிராமத்தில் (1920) பிறந்தவர். இளம் வயதில், தான் வசித்த பகுதியில் பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு அரிசி வழங்கி உதவினார்.

 முஸ்லிம் மாணவர் அமைப்பில் 1940-ல் சேர்ந்து மாணவர் தலைவர் ஆனார். 1943-ல் வங்காள முஸ்லிம் லீக்கில் சேர்ந்தார். 1946-ல் இஸ்லாமியா கல்லூரி மாணவ யூனியன் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வாழ விரும்பினார்.

 வறுமை, வேலையின்மை, மோசமான வாழ்க்கைத்தரம் இவற்றுக்கு சோஷலிஸம் தீர்வு தரும் என்று நம்பினார். தான் ஒரு வங்காளி என்பதை பெருமையாகக் கருதியவர்.

 பாகிஸ்தானில் உருது மட்டுமே தேசிய மொழி என்று 1949-ல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு வங்கத்தில் நடந்த போராட்டங்களுக்கு தலைமை யேற்றார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டும் 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மக்கள் ஆதரவு பெருகியதால் விடுதலை செய்யப்பட்டார்.

 அவாமி லீக் கட்சியில் இணைந்தார். 1955-ல் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

 கிழக்கு வங்கம் 1956-ல் கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1958-ல் ஜெனரல் அயூப்கான், ராணுவ ஆட்சியைக் கொண்டு வந்தார். இதை எதிர்த்த முஜிபுர் கைது செய்யப்பட்டார்.

 சிறையில் இருந்து வெளிவந்த இவர், தலைமறைவு இயக்கத்தைத் தொடங்கினார். வங்க மக்களின் அரசியல் அதிகாரத்துக்காகவும் கிழக்கு பாகிஸ்தான் விடுதலைக்காகவும் இவர்கள் பாடுபட்டனர்.

 தொடர்ந்து ஜனநாயகம் மறுக்கப்பட்டதால், 6 கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தை 1966-ல் வெளியிட்டார். இதில் சுயாட்சி, அரசியல் சுதந்திரம், பொருளாதார உரிமை வலியுறுத்தப்பட்டன. எந்த வேறுபாடுமின்றி அனைத்து வங்காளிகளின் ஏகோபித்த ஆதரவும் கிடைத்ததால் ‘வங்கபந்து’ (வங்காளிகளின் நண்பர்) என்று போற்றப்பட்டார்.

 1970-ல் நடந்த பொதுத் தேர்தல்களில் அவாமி லீக் கட்சி அபார வெற்றி பெற்றது. ஆனால் இவர் பிரதமராவதை ராணுவமும், முக்கியத் தலைவர்களும் விரும்பவில்லை. பாக். அதிபர் யாஹியா கான் ராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்து, அவாமி லீக்கை தடை செய்தார். புரட்சி வெடித்தது. ஏராளமானோர் கொல்லப் பட்டனர். முக்தி பாஹினி படை உருவானது. இந்திய ராணுவத்தின் உதவியுடன் முக்தி பாஹினி படையினர் பாகிஸ்தானுடன் போரிட்டு வென்றனர். 1971-ல் வங்க தேசம் உருவானது. புதிய தேசத்தின் முதல் அதிப ராகப் பொறுப்பேற்றார். பின்னர், பிரதமராகவும் இருந்தார்.

 ராணுவ சதியினால் 1975-ல் முஜிபுர் ரஹ்மானும் குடும்ப உறுப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது அவருக்கு வயது 55. அவரது இரு மகள்கள் (வங்கதேசத்தின் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா, அவரது சகோதரி ஷேக் ரிஹானா) மட்டும் வெளியூரில் படித்ததால் தப்பினர்.

SCROLL FOR NEXT