வலைஞர் பக்கம்

இன்று அன்று | 2011 மார்ச் 11: புகுஷிமா அணு உலை விபத்தும் வண்ணத்துப்பூச்சிகளின் மரணமும்

செய்திப்பிரிவு

இந்தியப் பெருங்கடல் பகுதியில் 2004-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உருவான பிரம்மாண்ட மான பேரலை ஏற்படுத்திய மோசமான பேரழிவுக்குப் பின்னர்தான் ‘சுனாமி’யைப் பற்றி பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவுகளுக்குப் பழக்கப்பட்ட ஜப்பானில் 2011 மார்ச் 11-ல் ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட சுனாமி, ஜப்பான் நிலப் பகுதிகளைக் கபளீகரம் செய்ததை உலகமெங்கும் உள்ளவர்கள் தொலைக்காட்சியில் நேரலையாகப் பார்த்து அதிர்ந்துபோனார்கள்.

நிலநடுக்கம், சுனாமியில் 15,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 6,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுனாமியின் தொடர்ச்சியாக, புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்து, இந்தப் பேரழிவின் விளைவாக ஏற்பட்ட மற்றொரு அசம்பாவிதம்.

பசிபிக் கடற்கரையோரம் உள்ள வடக்கு புகுஷிமா பகுதியில், சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட செண்டாய் நகரத்திலிருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள புகுஷிமாவின் டாய்ச்சி அணு உலைக்குள் கடல் நீர் புகுந்ததால், மின்சாரம் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் செயலிழந்தன. அணு உலையைச் சுற்றி எழுப்பப்பட்டிருந்த 19 அடி உயர தடுப்புச் சுவரை, 46 அடி உயரத்துக்கு எழுந்து வந்த அலை சுலபமாகத் தாண்டி அணு உலைக்குள் புகுந்தது. இதனால், குளிரூட்டும் சாதனங்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து, 6 அணு உலைகளில் 3 உலைகள் சேதமடைந்தன.

இதையடுத்து அந்த உலைகளிலிருந்து அணுக் கதிர்வீச்சு வெளியேறத் தொடங்கியது. இந்த அணு உலைகளைக் குளிர்விக்கும் பணிகளில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் டிரக்குகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அணு உலைகள் மீது தண்ணீரைப் பீய்ச்சியடித்தனர். இந்தப் பணிகளால் கதிர்வீச்சை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்தாலும், பல முறை புகை மண்டலம் ஏற்பட்டதால் பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.

அப்பகுதியில் வசித்த 45,000-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். 1986-ல் ரஷ்யாவின் செர்னோபில் அணு உலையில் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட மிக மோசமான அணுஉலை விபத்து இது. இந்த விபத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல், விலங்குகள் தாவரங்களும் அணுக்கதிர் வீச்சால் பாதிக்கப்பட்டன. இந்த விபத்துக்குப் பிறகு, (புகுஷிமா சுற்றுவட்டாரத்தில்) ஜப்பானில் பரவலாகக் காணப்படும் ‘பேல் கிராஸ் ப்ளூ’ வகை வண்ணத்துப்பூச்சிகளின் அளவு குறைந்ததுடன் அவற்றின் இறப்பு விகிதமும் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.- சரித்திரன்.

SCROLL FOR NEXT