வலைஞர் பக்கம்

ஜேன் டெலானோ 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

நவீன செவிலியர் பணியின் முன்னோடியும் அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) பிறந்த தினம் இன்று (மார்ச் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் (1862) பிறந்தவர். உள்ளூரில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, நியூயார்க்கில் உள்ள பெலவ்யூ மருத்துவமனையின் நர்ஸிங் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தார். 1886-ல் பட்டம் பெற்றார்.

 புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888-ல் பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். அவர்களை கொசுக்களிடம் இருந்து பாதுகாக்க கொசுவலை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கொசுக்களால் நோய் பரவும் என்பது கண்டறியப்படாத காலகட்டம் அது. செவிலியரின் பணிகளில் பல புதுமையான, பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார்.

 பிறகு அரிசோனாவில் உள்ள பிஸ்பீ என்ற இடத்தில் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகள் சேவை செய்தார்.

 பிலடெல்பியாவில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனையில் செவிலியர் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 1898-ல் அமெரிக்க ஸ்பெயின் போரின்போது, நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ் சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

 தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902-ல் நியமிக்கப்பட்டார். 1909-வரை அங்கு பணிபுரிந்தார். பிறகு அமெரிக்க ராணுவ செவிலி யர் அமைப்பின் கண்காணிப்பாளராக செயல்பட்டார்.

 செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கவுரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார். செவிலியர் துறையில் சிறந்து விளங்கிய இன்னொரு நர்ஸ் இசபெல் மெக்ஐஸக்குடன் சேர்ந்து, அடிப்படை சுகாதாரம் மற்றும் நோயாளிகள் பராமரிப்பு பற்றிய புத்தகத்தை எழுதினார்.

 அமெரிக்க தேசிய செஞ்சிலுவை செவிலியர் சேவைக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனி ஒருவராகப் பாடுபட்டு, அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார்.

 இவரது முயற்சியின் பலனாக, பேரிடர் நிவாரணம் மற் றும் அவசரகாலத் தேவைக்கான குழுக்கள் அமைக்கப் பட்டன. 8 ஆயிரத்துக்கும் அதிகமான செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் உலகப் போரில் அமெ ரிக்கா களம் இறங்கிய தருணத்தில் ராணுவத்தினருக்கு உதவ இவர்கள் அனைவரும் தயாராக இருந்தனர்.

 போரின்போது, இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள், காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.

 ஐரோப்பாவில் 1918-ல் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். ஏற்கெனவே கடும் உழைப்பினால் சோர்ந்துபோயிருந்த இவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ 57 வயதில் (1919) மறைந்தார்.

SCROLL FOR NEXT