ஒரு நிறத்தைச் சொன்னால் ஒருவருடைய பெயர் நினைவுக்கு வருமா? வரும். மஞ்சள் என்று சொன்னால் ஓவியர் வான்கோவின் பெயரைத் தவிர யாருடைய பெயர் நினைவுக்கு வரும் நமக்கு? மஞ்சள் என்ற நிறத்துக்கு மரணமில்லாத் தன்மையை வழங்கிய கலைஞன் வான்கோ. சூரிய ஒளியின் மஞ்சளை ஓவியத்தில் படியவைப்பதற்கான ஊடகமாகவே தன்னைக் கருதிக்கொண்டவர் வான்கோ.
வாழ்க்கை முழுதும் புறக்கணிப்புகளை மட்டுமே சந்தித்து, மனநிலை பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட மகத்தான ஓவியர் வின்சென்ட் வான்கோ. போஸ்ட் இம்பரஷனிஸ ஓவியர்களுள் ஒருவரான வான்கோவால், தனது வாழ்நாளில் ஒரேயொரு ஓவியத்தை மட்டும்தான் விற்க முடிந்தது. ஆனால், அவர் இறந்து 10 ஆண்டுகளுக்குப் பின்னர் இதே நாளில் நடந்த ஓவியக் கண்காட்சியில் அவரது ஓவியங்களைக் கண்ட உலகம் உறைந்து நின்றது. அந்த ஓவியங்களிலுள்ள நிறங்களில் வான்கோவின் இதயத்துடிப்புகளை உலகம் கண்டுகொண்டது. அதன் விளைவுதான், அதிக விலையில் விற்கப்பட்ட ஓவியங்களின் வரிசையில் வான்கோவின் ஓவியங்கள் பல இடம்பிடித்திருப்பது.
நெதர்லாந்தின் சுண்டெர்ட் நகரில் ஏழ்மை யான குடும்பத்தில் 1853 மார்ச் 30-ல் பிறந்த வின்சென்ட் வான்கோவின் ஓவியத் திறமை வெளிப்படத் தொடங்கியது 1880-க்குப் பிறகுதான். பிரஸ்ஸல்ஸ் அகாடமியில் ஓவியம் கற்ற பின்னர் நெதர் லாந்து திரும்பிய வான்கோ, இயற்கைக் காட்சிகளை உள்வாங்கி தனது ஓவியங்களில் புதுப்பரிமாணத்துடன் அவற்றைப் படைத்தார். 1885-ல் ‘உருளைக் கிழங்கு தின்பவர்கள்’ எனும் அவரது ஓவியம் முதன்முதலாக மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
1886-ல் பாரிஸ் சென்ற வான்கோ, தனது சகோதரர் தியோவின் வசிப்பிடத்தில் தங்கி, தனது ஓவியப் பணிகளைத் தொடர்ந்தார். அங்கு பால் காகின் போன்ற புகழ்பெற்ற பிரெஞ்சு ஓவியர்களின் அறிமுகம் கிடைத்தது.
எனினும், அவரது திறமைக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட வான்கோ, 1888-ல் பிரான்ஸின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்ல் நகரில் ஒரு வீட்டில் தங்கி ஓவியம் வரையத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற ‘சூரியகாந்தி’ வரிசை ஓவியங்களை வரைந்தது அந்தக் காலகட்டத்தில்தான். அதேசமயம், அவரது மனநிலை பாதிப்பும் அதிகமாகியிருந்தது. ஒருகட்டத்தில் சக ஓவியரான பால் காகினைத் தாக்க முயன்றார் வான்கோ. பின்னர் தனது காதையே அறுத்துக்கொண்டார். ஒருகட்டத்தில் பிறருக்குச் சுமையாகத் தான் இருப்பதாக உணர்ந்த வான்கோ, 1890 ஜூலை 27-ல் கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார். சிகிச்சை பலனளிக்காமல், 2 நாட்களுக்குப் பிறகு மரணமடைந்தார்.
1901 மார்ச் 17-ல் பாரிஸின் பெர்னெம்-ஜான் கண் காட்சியில் அவரது 71 ஓவியங்களும் முதன் முறையாகப் பார்வைக்கு வைக்கப்பட்டன. அழுத்த மான தீற்றல்களுடனும் வண்ணங்களுடனும் அவர் உருவாக்கியிருந்த ஓவியங்கள் ரசிகர்களுக்கும் விமர்சகர் களுக்கும் பரவசமூட்டின. அன்று பறக்கத் தொடங்கிய மஞ்சள் வண்ணத்துப்பூச்சிக்கு (வான்கோதான்!) அதற்குப் பிறகு மரணமே இல்லை!