உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை எழுத்தாளர், நாடக ஆசிரியர் டக்ளஸ் ஆடம்ஸ் (Douglas Adams) பிறந்த தினம் இன்று (மார்ச் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரில் (1952) பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியலில் அதிக ஆர்வம் கொண்டி ருந்தார். ஆசிரியரின் பாராட்டும் ஊக்கமும் எழுத்துத் திறனை மேம்படுத்தியது.
1970-ல் ஒரு எழுத்தாளனாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். அப்போது, ‘வெற்றி நிச்சயம்’ என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தார். ஆனால், உண்மை வேறுவிதமாக இருந்தது.
வானொலி, தொலைக்காட்சிகளில் இவரது எழுத்துக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. எனவே, வாழ்க்கையை ஓட்டுவதற்காக, கிடைத்த வேலைகளைச் செய்தார்.
ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. ‘த பர்க்கிஸ் வே’ மற்றும் ‘த நியூஸ் ஹட்லினெஸ்’ ஆகியவை இவரது ஆரம்பகால படைப்புகள். மெல்ல மெல்ல நிலைமையை உள்வாங்கிக்கொண்டு வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்.
‘மான்ட்டி பைத்தான்’ என்ற நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தார். 1977-ல் ‘த ஹிட்ச்ஹைக்கர்ஸ் கைடு டு த கேலக்ஸி’ என்ற இவரது நகைச்சுவை அறிவியல் புனைக்கதை பிரம்மாண்ட வெற்றி பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.
பிபிசி வானொலியில் இது முதலில் நகைச்சுவைத் தொடராக வெளிவந்தது. பிறகு, 5 புத்தகங்களாக வெளிவந்து 1.50 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையானது. இதன்மூலம் உலகப்புகழ் பெற்றார். இது 20-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 புத்தகங்கள் பட்டியலில் 24-வது இடத்தைப் பிடித்தது.
தொலைக்காட்சித் தொடர், ஆல்பம், கம்ப்யூட்டர் கேம், மேடை நாடகம் என பல்வேறு வடிவங்களில் இந்த கதை தயாரிக்கப்பட்டது. விற்பனையில் மற்றொரு சாதனை படைத்த ‘த ரெஸ்டாரென்ட் அட் தி எண்ட் ஆஃப் தி யுனிவர்ஸ்’ என்ற புத்தகத்தை1980-ல் எழுதினார்.
தொடர்ந்து ‘லைஃப், தி யுனிவர்ஸ் அண்ட் எவ்ரிதிங்’, ‘ஸோ லாங் அண்ட் தேங்ஸ் ஃபார் ஆல் த ஃபிஷ்’, ‘மோஸ்ட்லி ஹாம்லஸ்’, ‘டர்க் ஜென்ட்லிஸ் ஹோலிஸ்டிக் டிடெக்டிவ் ஏஜென்சி’, ‘தி லாங் டார்க் டீ டைம் ஆஃப் த சோல்’ என்பது உட்பட ஏராளமான புத்தகங்களை எழுதினார்.
இம்பீரியல், டொபேக்கோ விருது, சோனி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இளம் வயதிலேயே ‘கோல்டன் பென்’ விருதைப் பெற்றவர்.
நகைச்சுவை, அறிவியல், தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட இவரது படைப்புகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருத்தும் இடம்பெறும். இவரது முழு பெயர் டக்ளஸ் நோயல் ஆடம்ஸ் என்பதால், ரசிகர்களால் ‘டிஎன்ஏ’ என்று செல்லமாக அழைக்கப்பட்டார். உலகப்புகழ் பெற்ற படைப்பாளியாக மிளிர்ந்த இவர் 49 வயதில் (2001) மறைந்தார்.