தங்கள் நாட்டில் மட்டும், தங்கள் மொழியில் மட்டும், அல்லது ஒருசில நாடுகளில் மட்டும் பிரபலமான நடிகர்கள் என்று எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். ஆனால், உலக மக்கள் அனைவர் மனதையும் வெற்றிகொண்ட நடிகர்கள் என்று சார்லி சாப்ளின், புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகிய மூவரை மட்டுமே சொல்ல முடியும். சாப்ளின் தனது மகத்தான கலையின் மூலம் உலக மக்களின் துயர்துடைத்து, எல்லோரையும் நிம்மதியாக உறங்கவைத்தார் / உறங்கவைக்கிறார். ஆனால், அவரோ தனது கல்லறையில் நிம்மதியாக உறங்க முடியாமல் போனது தான் விநோதம்.
1952-ல், பிரிட்டனுக்குச் சென்றிருந்த சாப்ளினை, மீண்டும் நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்க அரசு மறுத்துவிட்டது. அவரது படைப்புகளில் கம்யூனிஸக் கருத்துகள் இருந்ததாகச் சந்தேகித்தது அமெரிக்கா. அதன் பின்னர், தனது 4-வது மனைவி ஊனா சாப்ளின் மற்றும் குழந்தைகளுடன் சுவிட்சர்லாந்தில் குடியேறினார். தனது இறுதிநாட்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். 1977 டிசம்பர் 25-ல், கிறிஸ்துமஸ் நாளில் தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல், சுவிட்சர்லாந்தின் கார்சியர்-சர்-வேவி கிராமத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இரண்டு மாதங்கள் கழித்து, 1978 மார்ச் 2-ல் சவப்பெட்டியுடன் அவரது உடல் திருடப்பட்ட தகவல், சாப்ளின் குடும்பத்தின ருக்குக் கிடைத்தது. “போலீஸார் இந்தத் தகவலைச் சொன்னதும், அமைதிக்குப் பேர்போன சுவிட்சர்லாந்திலா இப்படி நடக்கிறது என்று அதிர்ச்சியடைந்தோம்” என்று நினைவுகூர்கிறார் சாப்ளினின் மகன் யூஜின் சாப்ளின். சாப்ளினின் உடல் வேண்டுமானால், சுமார் ரூ. 3 கோடி வேண்டும் என்று கேட்டு, ‘கடத்தல்காரர்கள்’ பேரம் பேசினர். சாப்ளின் குடும்பத்துக்கு வந்த 200 தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரிக்கத் தொடங்கிய போலீஸார், மே 17-ல் திருடர்களைக் கண்டுபிடித்தனர். போலந்தைச் சேர்ந்த ரோமன் வார்டஸ், பல்கேரியாவின் கான்ட்ஷோவ் கெனவ் ஆகிய இருவரும்தான் அந்தக் குற்றவாளிகள். வறுமையில் வாடிய இருவரும் இப்படியொரு திட்டத்தில் இறங்கியது விசாரணையில் தெரியவந்தது. “சாப்ளின் இதைக் கேள்விப்பட்டால், என்ன முட்டாள்தனம் இது என்று கேட்டிருப்பார்...” என்று குறிப்பிட்டார் சாப்ளினின் மனைவி.
சரி, அவரது உடல் எங்குதான் இருந்தது? சாப்ளின் வீட்டிலிருந்து ஒரு மைல் தொலைவில் இருந்த கோதுமை வயலில், அவரது உடலைத் திருடர்கள் புதைத்துவைத்திருந்தனர். பல நாட்கள் ஆகிவிட்டதால், எங்கு புதைத்தோம் என்று தெரியாமல் திருடர்கள் குழம்பினார்களாம். ஒருவழியாகக் கண்டுபிடிக்கப்பட்டு உடல் மீட்கப்பட்டது. அதன் பின்னர், இப்படி ஒரு அசம்பாவிதம் நடக்கக் கூடாது என்று முடிவுசெய்த சாப்ளின் குடும்பத்தினர், வலுவான கான்கிரீட் கல்லறையில் அவரது உடலை அடக்கம் செய்தனர். இடையில் எக்கச்சக்கப் புரளிகள் கிளம்பின. யூதர்கள் அல்லாதவர்கள் புதைக்கப்படும் மயானத்தில் சாப்ளினைப் புதைத்ததால் (சாப்ளின் யூதர்!) உடல் திருடப்பட்டிருக்கலாம் என்றெல்லாம் கதைகட்டிவிட்டார்கள் சில புண்ணியவான்கள்.
இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘தி பிரைஸ் ஆஃப் ஃபேம்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியானது. நம்மூரில் என்றால் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் வழக்கு, கிழக்கு என்று கிளம்பியிருப்பார்கள். ஆனால், நகைச்சுவை மன்னனின் குடும்பத்தினர் படத்துக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். ஒத்துழைப்பு என்ன, படத்தின் முக்கியப் பாத்திரங்களில் சாப்ளினின் மகன் யூஜினும், பேத்தி டோலரஸும் நடித்தார்கள் என்றால் பாருங்கள். அதுமட்டுமல்ல, நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டு, திருடர் களில் ஒருவரின் மனைவி, சாப்ளினின் மனைவி ஊனாவுக்குக் கடிதம் எழுதினார். அதற்குப் பதில் எழுதிய ஊனா இப்படிக் குறிப்பிட்டார்: “எனக்கு உங்கள் மீது எந்த வருத்தமும் இல்லை. எல்லாமே மன்னிக்கப் பட்டுவிட்டது.”
எப்பேர்பட்ட மனிதர்கள்!