கோயில் குளங்கள் ஆன்மிகத்திற்கான இடங்களாகவே பார்க்கப்பட்டாலும், நீர் வள மேலான்மையை உணர்த்தும் பொருட்டே குளங்கள் கட்டப்பட்டன என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
ஒரு வகையில் மழை நீர் சேகரிப்பின் தேவையையும் கோயில் குளங்களின் மூலமாக நமது முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர். மழை நீர், குளங்களில் சேருவதன் மூலம் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலத்தடி நீர் சேர்ந்து குடிநீர் தேவை பூர்த்தியாகும். இதானால்தான் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனச் சொன்னார்கள் என்று தொடர்புபடுத்துவர்.
எது எப்படியோ, நீர் வளம் என்பது பாதுகாக்கப்படவேண்டியது. ஆனால், நீர் வள பாதுகாப்பு, மழை நீர் சேமிப்பு குறித்து என்ன பேசினாலும், நம்மூர்களில் இருக்கும் கோயில் குளங்களை நாம் எவ்வாறு பாதுகாத்து வருகிறோம் என்று கேட்டால், நாம் பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் நமக்கு பதில் கிடைக்காது.
முக்கியமாக, சென்னையில், பெருகி வரும் மக்கள் கூட்டத்தால் நாளுக்கு நாள் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருகிறது. குளங்களைப் பேணுவது ஒருவகையில் அதற்கான அடிப்படைத் தீர்வு. ஆனால் அத்தீர்வினை பெரிதாக யாரும் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. மேலே இணைப்பில் கொடுக்கப்பட்டிருப்பவை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளம், மைலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம் மற்றும் மைலாப்பூர் சித்திர குளம் ஆகியவற்றின் படங்கள்.
சில குளங்களில் இயற்கையாக தண்ணீர் ஊறும் நிலையும் போய், இப்போது குளத்தில் செயற்கையாக, சிமெண்ட் தரை பூசப்பட்டு தண்ணீர் வெளியிலிருந்து கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. கோடை காலங்களில் இன்னமும் தண்ணீருக்காக அல்லாடும் மக்கள் நம் தமிழகத்தில் உள்ளனர்.
கோடை நெருங்கும் வேளையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விழித்துக் கொண்டு குளங்களை சீரமைத்து நீர் ஆதாரங்களை காக்க வேண்டு என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டுகோள்.
கோயில் சென்று வரம் பெறுவதைக் காட்டிலும், கேட்காமலே வரம் தரும் குளங்களை வளப்படுத்துவதில் அக்கறை செலுத்துவோமே!