நவீன இந்தி இலக்கிய முன்னோடியும், கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் எனப் பன்முகத் திறன் கொண்டவருமான சச்சிதானந்த் ஹீரானந்த் வாத்ஸ்யாயன் ‘அக்ஞேய’ (Sachchidananda Hirananda Vatsyayan 'Ajneya') பிறந்த தினம் இன்று (மார்ச் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் (1911) பிறந் தார். வீட்டிலேயே சமஸ் கிருதம், பாரசீகம், ஆங்கி லம், வங்காள மொழிகள் கற்றார். நாளந்தா, உடுப்பி, சென்னை, நகர் உட்பட பல இடங்களில் இவரது குழந்தைப் பருவம் கழிந் தது. புராண, இதிகாசங் களைச் சிறு வயதிலேயே கற்றார்.
அப்பா கூறியபடி பிற மத நூல்களையும் கற்றார். பல மொழிகளிலும் பிரபலமான வர்களின் படைப்புகளைப் படித்தார். இலக்கிய ஆர்வம் அதிகரித்தது. கவிதைகள் எழுதத் தொடங்கினார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இன்டர்மீடியட் பயின்றார். லாகூர் ஃபார்மன் கிறிஸ்தவக் கல்லூரியில் பி.எஸ்சி. படித்தார். ஆங்கிலத்தில் எம்.ஏ. சேர்ந்தார். பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், சுகதேவ், யஷ்பாலுடன் தலைமறைவாக இருந்து விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் படிப்பைத் தொடர முடியவில்லை.
பலமுறை சிறை சென்றார். வீட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டார். சிறையில் இருந்தபோது தத்துவம், அரசியல், பொருளாதாரம், சட்டம் தொடர்பான புத்தகங்களைப் படித்தார்.
பின்னர் இவரது கவிதைத் தொகுப்புகள், கதைகள் வெளிவரத் தொடங்கின. சிறை அனுபவங்கள், சொந்த வாழ்க்கைத் துயரங்கள், மகிழ்ச்சி, தேசம், சமூகம் ஆகியவையே இவரது படைப்புகளில் கருவாக இருந்தன.
சுதந்திரத்துக்குப் பிறகு அகில இந்திய வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். இந்தியாவிலும் வெளிநாடு களிலும் ஏராளமான பயணங்களை மேற்கொண்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகம், ராஜஸ்தானின் ஜோத்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணியாற்றியவர்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘தினமன்’ இந்தி வார இதழில் நிறுவன ஆசிரியர், ‘நவபாரத் டைம்ஸ்’ இந்தி நாளிதழில் முதன்மை ஆசிரியர், ‘லோக் நாயக்’ ஜெயபிரகாஷ் நாராயணின் ‘எவ்ரிமேன்ஸ் வீக்லி’ இதழில் ஆசிரியர் என பல பொறுப்புகளை வகித்தவர்.
‘அக்ஞேய’ (புரிதலுக்கு அப்பாற்பட்ட) என்ற புனைப் பெயரில் பிரபலமானார். நவீன இந்தி இலக்கியத்தில் புதுக் கவிதையைக் கொண்டுவந்தார். அவரது 30 கவிதைத் தொகுப்புகள், 9 நாவல்கள், ஏராளமான சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
உத்தர் பிரியர்ஷினி என்ற நாடகத்தை எழுதியுள்ளார். ஏராளமான பயணக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள், நினைவுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். பல படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகின் தலைசிறந்த பிற மொழிப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்துள்ளார்.
1964-ல் சாகித்ய அகாடமி விருது, 1978-ல் ஞானபீட விருது உட்பட பல விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார். 76 வயதில் (1987) மறைந்தார்.