ஆன்மிகத்தோடு அறப்பணியும் ஆற்றி ‘கருணைக்கடல்’ என்று போற்றப்பட்ட மெஹர் பாபா (Meher Baba) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பிறந்தவர் (1894). இயற்பெயர் மெர்வான் ஷெரியர் இரானி. பல மொழிகள் கற்றார். ஹாஃபிஸ், ஷேக்ஸ்பியர், ஷெல்லியின் நூல்களை விரும்பிப் படித்தார். கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
ஹஸரத் பாபாஜான் என்று அழைக்கப்பட்ட வயதான முஸ்லிம் பெண் துறவியை தனது 19 வயதில் சந்தித்தார். நடமாடும் ஆலயமாகப் போற்றப்பட்ட அந்தப் பெண், இவரது நெற்றியில் முத்தமிட்டார். அது தனக்குள் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக உணர்ந்தார். வழக்கமான வாழ்க்கை முறையில் இருந்து விலகி துறவு மேற்கொண்டார்.
பிறகு உபாசனி மஹாராஜ், ஷீர்டி சாய்பாபா போன்ற மகான்களைச் சந்தித்தார். உபாசனி மஹாராஜுடன் 7 ஆண்டுகள் இருந்தார். இந்து, முஸ்லிம், ஜராதுஷ்டிரர்கள் (Zoroastrian) ஆகிய அனைத்துப் பிரிவினரும் இவரைப் பின்பற்றினர்.
கருணை உள்ளம் படைத்தவர் என்று பொருள்படும் வகையில் சீடர்கள் இவரை ‘மெஹர் பாபா’ என்று அழைத்தனர். 1922-ல் மெஹர் பாபா தனது சீடர்களுடன் சேர்ந்து மும்பையில் ‘மன்ஸில்-இ-மீம்’என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.
அவரும் சீடர்களும் உடலை வருத்தும் ஆன்மிகப் பயிற்சிகள், கடும் விரதங்களை மேற்கொண்டனர். இவர் இறைவனின் தூதர் என்று ஏராளமானோர் நம்பினர்.
அவரது மொழி அன்பின் மொழியாகவே இருந்தது. 1925-ம் ஆண்டு முதல் வாழ்நாள் கடைசி வரை சுமார் 44 ஆண்டுகளுக்கு மவுனமாக இருந்தார். சைகை, எழுத்து மூலமாகவே தன் கருத்தை தெரிவிப்பார்.
சீடர்களை சேவைப் பணிகளில் ஈடுபடுத்துவதோடு, அவரும் இணைந்து பணியாற்றுவார். பல புத்தகங்கள் எழுதியுள்ளார். இறைவன் நம் அனைவருக்குள்ளும் வாசம் செய்கிறார் என்பார். ‘எதற்கும் கவலைப்படாதே, எப்போதும் மகிழ்ச்சியோடு இரு’ என்று ஆசிர்வதிப்பார். இதுவும் சைகை மூலமாகவே.
அவ்வப்போது ரயிலிலும், நடந்தும் நீண்ட தூர யாத்திரைகளை மேற்கொண்டார். 1931-ல் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றார். அங்கும் ஏராளமான பக்தர் கூட்டம் திரண்டது. அமெரிக்காவில் ஒருமுறையும் புனேயில் ஒருமுறையும் விபத்துகளில் சிக்கியதால் அதிகம் நடமாடமுடியாமல் போனது. இதனால் தனது மேற்கத்தியச் சீடர்களை இந்தியாவுக்கு அழைத்தார்.
இளைஞர்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிப்பது குறித்து கவலை கொண்டார். 1952-ல் தன்னை ஒரு அவதார புருஷர் என்று பிரகடனம் செய்தார். 1959-ல் அவதார் மெஹர் பாபா அறக்கட்டளையை ஏற்படுத்தினார். ஏழை எளியவர்கள், நோயாளிகளுக்கு உதவ மருத்துவமனை, இலவசப் பள்ளி, கால்நடை மருத்துவமனை தொடங்கினார்.
ஏழை, எளியவர்களுக்கும், துன்பத்தில் இருப்பவர்களுக்கும் எண்ணற்ற தொண்டுகள் செய்து ‘கருணைக் கடல்’ என்று போற்றப்பட்ட மெஹர் பாபா 75 வயதில் (1969) மறைந்தார்.