உஸ்தாத் குரேஷி அல்லா ரக்கா கான். இசையுலகில் மரியாதையுடன் உச்சரிக்கப்படும் பெயர். பக்க வாத்திய இசைக் கருவி யான தபேலாவுக்குப் புகழ் சேர்த்த பெரும் கலைஞர் இவர். ஜம்மு காஷ் மீரின் பக்வால் கிராமத்தில் 1919 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் உஸ்தாத் அல்லா ரக்கா. இளம் வயதில் குர்தாஸ்பூரில் தனது உறவினருடன் தங்கியிருந்த அவர், இசையால் ஈர்க்கப்பட்டார். குறிப்பாக, தபேலா மீது பெரும் ஆர்வம் காட்டினார்.
இசை மீதான காதல் அவரை வீட்டை விட்டு வெளியேறச் செய்தது. பஞ்சாப்பைச் சேர்ந்த மியான் காதர் பக்ஷிடம் இசை கற்கத் தொடங்கினார். உஸ்தாத் ஆஷிக் அலிகான் போன்ற இசை மேதைகளிடமும் இசை பயின்றார். மணிக் கணக்கில் தபேலாவை வாசித்துக்கொண்டிருப்பாராம் அல்லா ரக்கா. அந்த உழைப்பின் பலனாக இணையற்ற தபேலா இசைக் கலைஞராகப் பின்னாளில் புகழ்பெற்றார்.
லாகூரில் நடந்த இசைக் கச்சேரி களில் பக்க வாத்தியக் கலை ஞராகத் தனது இசை வாழ்வைத் தொடங்கினார். மும்பை ஆல் இண்டியா ரேடியோவிலும் இசை நிகழ்ச்சிகளை வழங்கினார். ஏ.ஆர். குரேஷி எனும் பெயரில் ‘சபக்’ (1950), ‘பேவஃபா’ (1951), ‘கந்தான்’ (1955) உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களுக்கும் இசையமைத்தார் என்பது இசை ரசிகர்கள் பலர் அறியாத செய்தி!
பின்னர், திரையுலகை விட்டு விலகிய அல்லா ரக்கா இந்துஸ் தானி இசையில் மட்டும் கவனம் செலுத்தத் தொடங்கினார். சித்தார் மேதை ரவிஷங்கருடன் இணைந்து சிலிர்ப்பூட்டும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உலகமெங்கும் அந்த ஜோடி சென்று பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. சரோத் இசைக் கலைஞர் அலி அக்பர் கான், படே குலாம் அலிகான் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.
ஜாஸ் இசையில் புகழ்பெற்ற ட்ரம்மரான பட்டி ரிச்சுடன் இணைந்து ‘ரிச் அ லா ரக்கா’ (1968) எனும் இசை ஆல்பத்தை வெளியிட்டார். அவரது இசைச் சாதனைகளுக்கு மரியாதை செய்யும் விதமாக 1977-ல் பத்ம விருது வழங்கிக் கவுரவித்தது மத்திய அரசு. 1982-ல் சங்கீத நாடக அகாடமி விருதும் அவருக்குப் பெருமை சேர்த்தது. 2000-ல் இதே நாளில் அமரத்துவம் அடைந்தார் உஸ்தாத் அல்லா ரக்கா. ரசிகர்களுக்கு அவர் விட்டுச்சென்ற மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அவரது மகனான, புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேனைக் குறிப்பிட வேண்டும்!