வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1996 பிப்ரவரி 10: கேஸ்பரோவை வீழ்த்திய டீப் ப்ளூ

செய்திப்பிரிவு

செஸ் விளையாட்டில் நமது விஸ்வநாதன் ஆனந்துக்குக் கடுமையான சவாலாக இருந்த கேரி கேஸ்பரோவை யாரும் மறந்துவிட முடியாது. இன்று ரஷ்யாவில் மனித உரிமைப் போராளியாகவும் அரசியல் தலைவராகவும் தீவிரமாகச் செயல்படும் கேஸ்பரோவ், 13-வது வயதில், சோவியத் ஒன்றியத்தின் ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டம் வென்றவர்.

1980-ல் தனது 17-வது வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர். தனது 22-வது வயதில், உலக செஸ் சாம்பியனான சோவியத் செஸ் வீரர் அன்டோலி கர்ப்பாவைத் தோற்கடித்துக் காட்டியவர். 1986 முதல் தான் ஓய்வுபெற்ற 2005-ம் ஆண்டு வரை செஸ் உலகில் முதல் இடத்தில் இருந்தவர் காஸ்பரோ. செஸ் விளையாட்டில் எத்தனையோ சாதனைகளைப் புரிந்தவர்.

அப்பேர்ப்பட்ட ஜாம்பவானைத் தோற்கடித்துக் காட்டியது ஒரு கணினி. செஸ்ஸில் வினாடிக்கு 20 கோடி நகர்த்தல்களை நிகழ்த்திக் காட்டும் அளவு திறன் கொண்ட அதிபுத்திசாலிக் கணினி அது. அதன் பெயர் ‘டீப் ப்ளூ’! பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமான ஐபிஎம் தயாரிப்பு அது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தின் ஃபிலடெல்பியா நகரில் 1996-ல் இதே நாளில் கேஸ்பரோவுடன் மோதியது ‘டீப் ப்ளூ’.

அந்தக் கணினியின் அணியில் மென்பொருள் நிபுணர்கள், செஸ் விளையாட்டு நிபுணர்களும் இடம்பெற்றிருந்தார்கள். உலகமெங்கும் 60 லட்சம் பார்வையாளர்கள் இணையம் வழியாக அந்தப் போட்டியின் ஒவ்வொரு நிமிடத்தையும் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

முதல் போட்டியில், கேஸ்பரோவை வென்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது ‘டீப் ப்ளூ’. நடப்பு சாம்பியன் ஒருவரை, செஸ் விளையாட்டின் சரியான விதிகளின் கீழ், சரியான நேர இடைவெளியில், ஒரு கணினி தோல்வியுறச் செய்தது அதுதான் முதல் முறை. இரண்டு மணி நேரத்தில், 40 ‘மூவ்’களில் கேஸ்பரோவை வீழ்த்தியது ‘டீப் ப்ளூ. இரண்டாவது போட்டியில் கேஸ்பரோவ் வென்றார். அடுத்த இரண்டு போட்டிகளும் டிரா செய்யப்பட்டன. 5-வது மற்றும் 6-வது போட்டிகளில் வென்ற கேஸ்பரோவ் அந்தத் தொடரைக் கைப்பற்றினார். பரிசாக 4 லட்சம் டாலர்கள் அவருக்குக் கிடைத்தன.

மேம்படுத்தப்பட்ட ‘டீப் ப்ளூ’ கணினிக்கும் கேஸ்பரோவுக்கும் 1997 மே 11-ல் மீண்டும் போட்டி நடந்தது. அதில் முதல் போட்டியில் கேஸ்பரோவ் வென்றார். இரண்டாவது போட்டியில் ‘டீப் ப்ளூ’ வென்றது. 3, 4 மற்றும் 5-வது போட்டிகள் டிராவில் முடிந்தன. 6-வது போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தது ‘டீப் ப்ளூ’. எனினும் தன்னைத் தோற்கடிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, ஐபிஎம் அணி ஆடியதாக அதிருப்தி தெரிவித்தார் கேஸ்பரோவ். இந்தப் போட்டியில் வென்றதற்காக ‘டீப் ப்ளூ’ தனது எஜமானர்களுக்குச் சம்பாதித்துக்கொடுத்த தொகை, அதிகமில்லை 7 லட்சம் டாலர்கள்தான்!

- சரித்திரன்.

SCROLL FOR NEXT