வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1974 பிப்ரவரி 4: ஒவ்வோர் ஏழைக்கும் 70 டாலர்!

சரித்திரன்

ஒரு திரைப்படத்துக்கான அனைத்து அம்சங்களையும் கொண்ட சம்பவம் இது. கலிஃபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரின் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் துப்பாக்கி ஏந்தியவாறு அதிரடியாக நுழைந்தது 3 பேர் கொண்ட கும்பல். அதில் ஒரு பெண்ணும் இருந்தார். அந்த வீட்டுக்குள் இருந்த, பேட்ரிசியா ஹர்ஸ்ட் எனும் 19 வயது பெண்ணைச் சரமாரியாகத் தாக்கியது கும்பல். பின்னர், கண்கள் கட்டப்பட்ட நிலையில் காரின் டிக்கிக்குள் அடைக்கப்பட்டு அந்தப் பெண் கடத்திச் செல்லப்பட்டார். பேட்ரிசியாவின் தாத்தா ராண்டால்ஃப் ஹர்ஸ்ட் அமெரிக்கப் பத்திரிகைத் துறையில் ஜாம்பவான்!

இந்தச் சம்பவத்துக்கு ‘சிம்பியானிஸ் லிபரேஷன் ஆர்மி’ (எஸ்.எல்.ஏ.) என்னும் இடதுசாரிக் குழு பொறுப்பேற்றது. அவரை விடுவிக்க அந்தக் குழு விதித்த நிபந்தனைதான் வித்தியாசமானது. கலிஃபோர்னியாவில் இருக்கும் ஏழைகள் ஒவ்வொருவருக்கும் தலா 70 டாலர் (இன்றைய மதிப்பில் சுமார் ரூ.4,300) மதிப்பிலான உணவுப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கூறியது. ஹர்ஸ்ட் குடும்பத்தார் முதலில் 2 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவுப் பொருட்களை விநியோகித்தார்கள். எனினும், எஸ்.எல்.ஏ. அமைப்பு திருப்தியடையவில்லை. அவர் விடுவிக்கப்படும் அறிகுறியும் தென்படவில்லை.

இரண்டு மாதம் கழித்து, சான் பிரான்சிஸ்கோ வங்கியிலும் லாஸ் ஏஞ்சலீஸ் கடை ஒன்றிலும் கொள்ளை யடித்த கும்பலில் பேட்ரிசியாவும் இருந்ததை அறிந்து அமெரிக்காவே அதிர்ந்தது. தன்னைக் கடத்திய எஸ்.எல்.ஏ. அமைப்பில் சேர்ந்துவிட்டதாக அவர் அறிவித்தார். அந்த அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டார்.

1976 செப்டம்பர் 18-ல் சான் பிரான்சிஸ்கோவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்து பேட்ரிசியா கைதுசெய்யப்பட்டார். அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்தது. பின்னர், அதிபர் ஜிம்மி கார்ட்டர் அவரை விடுதலை செய்தார். அதன் பின்னர், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுவரும் பேட்ரிசியா, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளைச் செய்துவருகிறார். சில ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். 2001-ல் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கினார் அதிபர் பில் கிளிண்டன்.

எஸ்.எல்.ஏ. அமைப்பினரால் மூளைச் சலவை செய்யப் பட்டதாக, பின்னாட்களில் பேட்ரிசியா குறிப்பிட்டார். அவருக்கும் ‘ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ (அதாவது, கடத்தியவர்கள் மீது ஏற்படும் ஈர்ப்பு) வந்திருக்கும் என்று அமெரிக்கர்கள் பரபரப்பாகப் பேசிக்கொண்டார்கள். பொதுவாக, கடத்தப்படுபவர்களில் 8% நபர்களுக்கு ஸ்டோக்ஹோம் சிண்ட்ரோம் ஏற்படுவதாக அமெரிக்காவின் எஃப்.பி.ஐ-யிடம் இருக்கும் தரவுகள் தெரிவிப்பது குறிப்பிடத் தக்கது. பேட்ரிசியா கடத்தப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர்தான் ஸ்டாக்ஹோம் சம்பவம் நடந்தது என்பது இன்னும் சுவாரசியமானது!

SCROLL FOR NEXT