தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்வது குறித்து ஏராளமான புத்தகங்களை எழுதியும், உரையாற்றியும் கோடிக்கணக்கான மக்களுக்கு ஊக்கமளித்து வரும் ஜான் கால்வின் மாக்ஸ்வெல் (John Calvin Maxwell) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 20). இவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து:
அமெரிக்காவின் மிச்சிகன், கார்டன் சிட்டியில் பிறந்தவர் (1947). ஓஹியோ கிறிஸ்டியன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றார். அசூசா பசிஃபிக் பல்கலைக்கழகத்தில் இறைப்பணி தொடர்பான கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1970 முதல் இந்தியானா, ஓஹியோ, கலிஃபோர்னியா மற்றும் ஃபுளோரிடாவில் உள்ள தேவாலயங்களை நிர்வகிக்கத் தொடங்கினார். 14 வருடங்கள் மூத்த பாதிரியாராக பணியாற்றினார். பின் 1995-ல் தலைமைப் பண்பு குறித்த முழு நேர பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் மாறும் நோக்கத்துடன் தேவாலயப் பணியிலிருந்து விலகினார்.
உலகம் முழுவதும் மிகவும் செல்வாக்கு படைத்த பிசினஸ் தலைவர்கள் பின்பற்றும் தலைமைப் பண்புகளை ஆய்வு செய்தார். அபாரமான சொல்லாற்றல் மூலம் இந்தப் பண்புகளை ஏராளமானோர் பின்பற்ற வழிகாட்டி வருகிறார்.
வெற்றிகரமாக விற்பனையாகும் லீடர்ஷிப் புத்தகங்களை எழுதியுள்ளார். கூட்டங்கள், சந்திப்புகள் மூலம் ஆண்டுதோறும் 3,50,000-க்கும் அதிகமான மக்களை இவர் சந்தித்து வருகிறார்.
தனிநபர் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான பயிற்சிகளை வழங்கி வருகிறார். ‘அனைத்துமே வளர்வதும் வீழ்வதும் தலைமைப் பண்பில்தான் உள்ளது’ என்ற இவரது கோட்பாடு, ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனங்களின் செயல் திறனை மேம்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவரது புத்தகங்கள் ஒன்றரைக் கோடிக்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளன. INJOY, மாக்ஸிமம் இம்ப்பாக்ட், தி ஜான் மாக்ஸ்வெல் டீம், ஐ.எஸ்.எஸ். மற்றும் தலைவர்களுக்கு உதவும் சர்வதேச தலைமைப் பண்பு வளர்ச்சி நிறுவனமான எக்யூப் (EQUIP) ஆகியவற்றின் நிறுவனர்.
ஆண்டுதோறும் இவர் ஃபார்சூன் 500 நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அரசியல் தலைவர்களிடையேயும், பல நிறுவனங்களிலும், அமைப்புகளிலும் உரை நிகழ்த்தி வருகிறார்.
நியு யார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், பிசினஸ் வீக் ஆகிய பத்திரிகைகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச் சிறந்த ஆசிரியர்களில் இவரும் ஒருவர். உலகின் தலைசிறந்த தலைமைப் பண்பு குரு என்ற பெருமை பெற்றுள்ளவர். இவரது பல புத்தகங்கள் உலகம் முழுவதும் லட்சக்கணக்கில் விற்பனையாகியுள்ளன.
2013-ல் இவரது நிறுவனம் 24,000 தலைவர்களுக்குப் பயிற்சி அளித்தது. இதுவரை 185 நாடுகளில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். பல பிசினஸ் நிறுவனங்களின் தலைமைப் பண்பு பயிலரங்குகளில் இவருக்கு பரிசுகளும், கவுரவங்களும் வழங்கப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் சிறந்த தலைமைப் பண்பு பயிற்சி குருவாகத் தொடர்ந்து 6 ஆண்டுகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளார். தற்போதும் தெற்கு ஃபுளோரிடாவில் ஜான் கால்வின் மாக்ஸ்வெல் தன் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.