மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க மூலக்கூறு உயிரியல் விஞ்ஞானியான குரானா பிறந்த நாள் இன்று (ஜனவரி 9). இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாநிலத்தின் ராய்ப்பூர் கிராமத்தில் பிறந்தார். தந்தை கிராம வரி வசூலிப்பவராகப் பணியாற்றி வந்தார். ஏழ்மை நிலையிலும் பிள்ளைகளைப் படிக்க வைத்தார். இளம் வயது முதலே கல்வியில் சிறந்து விளங்கினார்.
லாகூர், பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி. பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேறினார். 1945-ஆம் ஆண்டு வேதியியலில் முதுகலைப்பட்டம் பெற்றார். அரசு உதவித் தொகை பெற்று இங்கிலாந்து லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு, டாக்டர் பட்டம் பெற்றார்.
1948-ல் ஸ்விட்சர்லாந்து ஃபெடரல் தொழில்நுட்ப நிறுவனத்தில் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார். 1949-ல் இந்தியா திரும்பினார். இங்கு சரியான வேலை கிடைக்காமல், மீண்டும் இங்கிலாந்து சென்றார். 1953-ல் காமன்வெல்த் ஆய்வுக் கழகத்தில் கரிம வேதியியல் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியா ஆய்வகத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார். 1960-ல் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நொதிகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தில் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
4 ஆண்டுகள் உயிரி வேதியியல் பேராசிரியராகவும், பிறகு அந்நிறுவனத்தின் துணை இயக்குநராகவும் பணி யாற்றினார். 1950-ல் மனித உடலின் சில செயல்முறைகளுக்கு இன்றியமையாத இணைநொதி-ஏ (coenzyme-A) என்ற வேதிப் பொருளை உற்பத்தி செய்தார். இது தொடர்பான ஆய்வு மூலம் மரபுவழியிலான சில நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டது.
இந்த ஆய்வுக்காக 1968-ல் இவருக்கும் நோரென்பர்க், ஹாலி ஆகிய இருவருக்கும் மருத்துவத்துக்கான நோபல் பரிசு கூட்டாக வழங்கப்பட்டது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தில் இவர் மேற்கொண்ட மரபுக்குறியீடு (genetic code) பற்றிய ஆய்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. உயிரினங்களின் குடற் பகுதியில் இருக்கும் எஸ்கிரிஷியா கோலி (Escherichia coli) என்னும் நுண்ணுயிரிகளின் மரபணு உருவாக்கத்தில் குரானாவும் அவருடைய குழுவினரும் ஈடுபட்டனர்.
படிப்படியாக முயன்று இந்த நுண்ணுயிரியின் சுமார் 207 மரபணுக்களை அவர்கள் செயற்கையாக உருவாக்கினர். பின்னர், 1976-ல் இந்த செயற்கை மரபணுக்களை எஸ்கிரிஷியா கோலி நுண்ணுயிரியுடன் இணைத்ததும் அவை இயற்கை மரபணுக்களைப் போலவே செயல்பட்டன.
புரதத்தை செயற்கையாக உற்பத்தி செய்வதிலும் இவர் மகத்தான பங்காற்றியுள்ளார். அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், இந்திய அரசின் பத்மபூஷண், கொல்கத்தா போஸ் நிறுவனத்தின் ஜே.சி.போஸ் பதக்கம் உட்பட பல விருதுகளையும், பரிசுகளையும் வென்றுள்ளார்.
இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில், விஸ்கான்சின் மேடிசன் உயர் தொழில்நுட்பத் துறையும் இந்திய-அமெரிக்க அறிவியல் தொழில்நுட்ப அமைப்பும் இணைந்து குரானா புரோகிராம் என்ற அமைப்பை 2007ல் தொடங்கின.
முதன் முறையாக செயற்கை முறையில் மரபணுக்களை ஆய்வுக்கூடத்தில் உற்பத்தி செய்து அறிவியல் உலகுக்கு புதிய திசை காட்டிய மருத்துவ அறிவியல் மேதை ஹர் கோவிந்த் குரானா 89-ஆவது வயதில் மரணமடைந்தார்.