இப்படி ஒரு மாற்றல் உத்தரவு வரும் என்று சம்பந்தம் கனவிலும் நினைக்கவில்லை.
உடன் வேலை பார்ப்பவர்கள் உச்சுக் கொட்டினார்கள். பின் தங்கிய மாநிலத்துக்குப் போட்டது தான் போட்டார்கள், ஒரு நகரமாகப் பார்த்துப் போடக் கூடாதா..
மொட்டை கிராமம்.. அதுவும் மலை அடிவாரத்துக்கு இடமாற்றம் செய்திருந்தார்கள்.
கொஞ்சம் சலிப்போடுதான் சம்பந்தம் அந்த ஊருக்கு போய்ச் சேர்ந்தார்.
கொஞ்ச நாள் தனியாக இருப்போம். பிறகு யாரையாவது பிடித்து அங்கிருந்து இடமாற்றம் செய்துகொள்ளலாம் என்று நினைத்தார்.
ஒரு வாரம் அந்த ஊர் பழகுவதற்கு கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது. ஆனால் அந்த ஊர் மக்களின் கள்ளங்கபடமற்ற தன்மை சூதுவாது தெரியாத அப்பாவித்தனம் அவருக்கு பிடித்துப் போனது.
எல்லா வீட்டு வேலைகளுக்கும் குறைவான சம்பளத்திலேயே ஆட்கள் கிடைத்தனர்.
காய்கறிகள், பழங்கள், பால், தயிர் ஆகியவை புதியதாகக் கலப்படமின்றிக் கிடைத்தன. அருகில் நீர்வீழ்ச்சியில் இருந்து சுத்தமான நீர் தடையின்றிக் கிடைத்தது. அங்குள்ள சில கீழ்நிலை ஊழியர்களின் இல்லங்களுக்குச் சென்றபோது, அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்த்து சம்பந்தம் ஆச்சரியப்பட்டார்.
எல்லோரும் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பெரியவர்கள் சொல்படிதான் எல்லோரும் நடந்தனர். மாமியார் சொல்படி தான் சமையல் உட்பட அனைத்து வேலைகளும் நடந்தன. குழந்தைகள் பெற்றோருக்குப் பயந்து நடந்தனர்.
கொடுக்கல் வாங்கலில் நாணயம் கடைபிடிக்கப்பட் டது. கலப்படம் என்பதே தெரியாது. தொலை தூரத்து டவுனில் ஒரு ஆஸ்பத்திரி இருந்தது. அங்குதான் கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் ஆகியவையும் இருந்தன. ஆனால் இந்த ஊரில் இருந்து யாரும் போனதாகத் தெரியவில்லை.
இடையில் விடுமுறைக்கு ஊருக்கு வந்தார் சம்பந்தம்.
“என்னப்பா சம்பந்தம் இப்படி பிற்போக்கான இடத்துல போய் மாட்டிக்கிட்டே” என்று மற்றவர்கள் கேட்க, “இல்லே... அங்கு செல்போன் டவர், இன்டர் நெட் வசதிகள், மால்கள், பெட்ரோல் பங்க், கால் டாக்ஸி, பிஸா டெலிவரி இல்லை தான். ஆனால் வாழ்க்கை முறையில் அவர்கள் ரொம்ப முன்னேறி இருக்கிறார்கள். அந்த நிம்மதி இங்கே கிடையாது. அவர்களிடம் நாம்தான் கற்க வேண்டும். நாமதான் பின்னாடி இருக்கோம்” என்றார் சம்பந்தம்.