1986-ல் இதே நாளில் காலை 11:38 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தின் கேப் கனவெரல் ஏவுதளத்திலிருந்து சேலஞ்சர் விண்கலம் விண்ணை நோக்கி சீறிக்கொண்டு எழுந்தது. அந்த விண்கலத்தில் 37 வயது ஆசிரியை கிறிஸ்டா மெக்காலிஃப் உட்பட 7 பேர் இருந்தார்கள். விண்வெளிக்குச் செல்லும் விண்வெளி வீரர் அல்லாத முதல் நபர் எனும் சந்தோஷத்தில் இருந்தார் கிறிஸ்டா. இதற்காக நடத்தப்பட்ட போட்டியில் வென்ற அவருக்கு, விண்வெளிச் சூழலை எதிர்கொள்வதற்காகப் பல மாதங்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஜனவரி 23-ம் தேதி அன்றே சேலஞ்சர் விண்கலத்தை விண்ணில் ஏவத் திட்டமிட்டிருந்தது நாஸா. எனினும், தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் மோசமான வானிலை காரணமாகப் பயணம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக ஜனவரி 28-ம் தேதி அந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
நிகழ்வைப் பார்வையிட வந்திருந்த நூற்றுக் கணக்கானோர் பிரமிப்புடன் அதைக் கவனித்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்டாவின் குடும்பத்தாரும் அந்தக் கூட்டத்தில் அடக்கம். கோடிக் கணக்கானோர் அதைத் தொலைக்காட்சி நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தனர். விண்ணில் ஏவப்பட்ட சேலஞ்சர் விண்கலத்திலிருந்து சரியாக 73 வினாடிகளுக்குப் பிறகு புகையும் தீப்பிழம்புகளும் வெளிவருவதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே வானில் பிரம் மாண்டமான வெடியைப் போல் வெடித்துச் சிதறியது விண்கலம். அதில் இருந்த யாரும் உயிர் பிழைக்கவில்லை.
அமெரிக்காவை உலுக்கியெடுத்த இந்த விபத்துக்கு என்ன காரணம் என்பதை அறிய அதிபர் ரொனால்டு ரீகன் உத்தரவிட்டார். இதற்காகச் சிறப்பு ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. நிலவில் கால்பதித்த முதல் நபரான நீல் ஆம்ஸ்ட்ராங்கும் இந்த ஆணையத்தில் இடம் பெற்றார். விண்கலத்தில் பொருத்தப்பட்ட ‘ஓ-ரிங்’ எனும் சாதனம், குளிர்ந்த வானிலை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் செயல்படாததால் ஏற்பட்ட தொடர் விளைவுகள் சேலஞ்சரை வெடிக்கச்செய்தன என்று விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவதை 2 ஆண்டு களுக்கு நிறுத்திவைத்தது நாஸா.
2003 - பிப்ரவரி 1-ல் விண்வெளியிலிருந்து பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த கொலம்பியா விண்கலம், பூமியின் வளிமண்டலத்தை எட்டியபோது எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியது, உலகையே உலுக்கிய மற்றொரு சம்பவம். அதில் உயிரிழந்த 7 பேரில் இந்திய அமெரிக்கரான கல்பனா சாவ்லாவும் ஒருவர்!