அமெரிக்காவின் முக்கிய தொழிற்சங்கத் தலைவர் சாமுவேல் கோம்பர்ஸ் (Samuel Gompers) பிறந்த தினம் இன்று (ஜனவரி 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
நெதர்லாந்து யூத தம்பதியின் மகனாக லண்டனில் பிறந்தவர். குடும்ப வறுமை காரணமாக 10 வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, சுருட்டு தயாரிப்பவரிடம் எடுபிடி வேலைக்குச் சேர்ந்தார். பின்னர், இரவுப் பள்ளியில் சேர்ந்து படித்தார்.
1863-ல் குடும்பம் அமெரிக்காவில் குடியேறியது. இவரது உதவியுடன் வீட்டில் சுருட்டு தயாரித்தார் தந்தை. தன் நண்பர்களுடன் சேர்ந்து விவாத கிளப் ஆரம்பித்தார் கோம்பர்ஸ். கிளப் மூலம் பலரது அறிமுகம் கிடைத்தது. பின்னாளில் அவர் மேடைப் பேச்சாளராக மாறுவதற்கான பயிற்சிக்களமாகவும் இது அமைந்தது.
1864-ல் நியூயார்க் நகர சுருட்டுத் தயாரிப்பாளர் சங்கத்தில் சேர்ந்தார். தொழிலாளர் நலனுக்காக குரல் கொடுத்தார். வேலைநிறுத்தம், பணிப் புறக்கணிப்பு போன்றவை தொழிலாளர்களின் ஆயுதங்கள் என்றார்.
சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் முன்னாள் செயலர் கார்ல் லாரலை வழிகாட்டியாக ஏற்றார். 1875-ல் சிகர் மேக்கர்ஸ் இன்டர்நேஷனல் யூனியன் லோக்கல் 144-ன் தலைவரானார்.
மற்ற தொழிற்சங்கங்கள் போல இதுவும் 1877-ல் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்தது. கோம்பர்ஸும் நண்பர்களும் இதை மீண்டும் நிலைநிறுத்தப் பாடுபட்டனர். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தனர்.
1881-ல் ஒழுங்கமைக்கப்பட்ட வர்த்தகம் மற்றும் தொழிலாளர் யூனியன்களின் கூட்டமைப்பை உருவாக்க உதவியாக இருந்தார்.1886-ல் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பாக (ஏஎப்எல்) இது மறு உருவாக்கம் செய்யப்பட்டது. அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். இறுதிவரை அதன் தலைவராகப் பணியாற்றினார்.
இந்த கூட்டமைப்பு மெல்ல மெல்ல வலுப்பெற்றது. தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கவும், அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படவும் பாடுபட்டார்.
உள்ளூர் மக்களின் வருமானம் பாதிக்கப்பட்டதாலும், அந்நியக் கலாச்சாரம் பரவியதாலும் வெளிநாட்டினர் குடியேற்றத்தை எதிர்த்தார். தொழிலாளர் நலனுக்கான சட்டங்களை கொண்டுவரச் செய்ததோடு, அவை அமலுக்கு வருவதையும் உறுதி செய்தார். முதல் உலகப்போரின்போது, அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் இவரை தேசியப் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினராக நியமித்தார்.
தொழிலாளர் ஆலோசனை வாரியத் தலைவராகப் பணிபுரிந்தார். ஊழியர்களின் பொருளாதார மேம்பாடு, அதிக ஊதியம், குறைவான பணி நேரம், பாதுகாப்பான பணிச் சூழல் ஆகியவற்றை தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தருவதே இவரது அடிப்படை நோக்கமாக இருந்தது.
அரசியலில் பங்கேற்குமாறு தொழிற்சங்க உறுப்பினர்களை ஊக்கப்படுத்தினார். பொருளாதார மேம்பாட்டை மனதில் கொண்டு வாக்களிக்குமாறு அவர்களிடம் கூறுவார். 1919-ல் பாரீஸ் அமைதி மாநாட்டில் தொழிலாளர் பிரச்சினைகளுக்கான அதிகாரபூர்வ ஆலோசகராக கலந்துகொண்டார். சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் இயற்கை வளங்கள், இயற்கை வாய்ப்புகள் சமமானவை என்ற பொருளாதார தத்துவத்தைக் கொண்டிருந்த சாமுவேல் கோம்பர்ஸ் 74 வயதில் மறைந்தார்.