நெடுந்தொடர்கள், நேரலைச் செய்திகள், திரைப்படங்கள், நகைச்சுவை, இசை, மருத்துவம் என்று உலகில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் நம் வரவேற்பறைக்குக் கொண்டுவரும் மாயக்கண்ணாடியான தொலைக்காட்சி செயல்படத் தொடங்கி, இன்றுடன் 89 ஆண்டுகள் ஆகின்றன.
தொலைக்காட்சி எனும் முழுமையடைந்த சாதனத்தை உருவாக்கிய ஸ்காட்லாந்து விஞ்ஞானி ஜான் லோகி பெயர்டு, 1926 ஜனவரி 27-ல், லண்டனில் முதன்முதலாக அதை இயக்கிக் காட்டினார். அதாவது, புகைப்பட கேமரா கண்டுபிடிக்கப்பட்டு சரியாக 100 ஆண்டுகள் கழித்து, தொலைக்காட்சியின் காலம் தொடங்கியது.
உண்மையில், தொலைக்காட்சி தொடர்பான ஆய்வுகள் 19ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டன. ஜெர்மனியைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி பால் நிப்கோவ் 1884-ல் தொலைக்காட்சியின் அடிப்படைத் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருந்தார். அவரது தொழில்நுட்பத்தை மேம்படுத்தித் தொலைக்காட்சியை உருவாக்கப் பலர் முயன்றனர். அதில் வெற்றி கண்டவர் ஜான் லோகி பெயர்டுதான்! தான் கண்டுபிடித்த அந்த சாதனத்துக்கு ‘டெலிவிசர்’ என்று பெயர் வைத்தார் பெயர்டு. ‘சுழலும் தகடு’ எனும் கருவியைக்கொண்டு, காட்சிப் பொருளை ஸ்கேன் செய்து, மின்னணுத் தூண்டுதல் முறையில் படம் பிடிக்கப்பட்ட கருப்பு வெள்ளைக் காட்சியை கேபிள் மூலம் கடத்திக் காட்சிப்படுத்தினார். லண்டனின் சோஹோ பகுதியில் உள்ள ஃப்ரித் தெருவில் இருந்த தனது ஆய்வகத்தில் இந்த அதிசயத்தை அவர் நிகழ்த்திக் காட்டினார்.
1928-ல் தொலைபேசி இணைப்பைப் பயன்படுத்தி, லண்டனிலிருந்து நியூயார்க் நகரத்துக்கு தொலைக்காட்சியை ஒளிபரப்பி சாதனை செய்தார். அதே ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சியையும் அவர் உருவாக்கினார். அதே ஆண்டில் நியூயார்க் நகரின் ஸ்கீனாக்டேடி பகுதியில் உள்ள வீட்டில் ரிசீவர் சாதனம் பொருத்தப்பட்ட தொலைக்காட்சி இயக்கிக் காட்டப்பட்டது. அதன் பின்னர், அந்தப் பகுதியில் உள்ள பல வீடுகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மக்கள் மெய்ம்மறந்து ரசித்தார்கள். வானொலி புழக்கத்தில் இருந்த காலத்தில், தொலைக்காட்சியும் தனக்கான இடத்தைப் பிடித்தது. இன்று இந்தியாவில் மட்டும் 800-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் இயங்குகின்றன!