வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1971 ஜனவரி 5: முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி

சரித்திரன்

வேகமாக நகரும் உலகில் பயண நேரம், விளையாட்டு உட்பட எல்லாமே சுருங்கிவிட்டன. ஐந்து நாட்கள் ஆடும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான மரியாதை இன்றும் இருக்கிறது என்றாலும், ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பைப் பெற்றிருப்பவை 20 ஓவர் ‘ட்வென்ட்டி- ட்வென்ட்டி’ போட்டிகள்தான். எனினும், ஒருநாள் முழுவதும் ரசிகர்களைப் பரபரப்புடனான எதிர்பார்ப்புடன் வைத்திருப்பவை ஒருநாள் போட்டிகள்தான்.

இந்தப் போட்டிகள் உருவாக இயற்கையே வாய்ப்பளித்தது. 1970-71-ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டித் தொடர் நடந்துகொண்டிருந்தது. மூன்றாவது போட்டியின் முதல் மூன்று நாட்களில் விடாமல் பெய்த மழையால், ஆட்டம் முற்றிலும் தடைபட்டது. அப்போது, ஒரே நாளில் கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்ற யோசனை போட்டி ஏற்பாட்டாளர் களுக்கு வந்தது.

அதன்படி, 40 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி, 1971 ஜனவரி 5-ல் நடத்தப்பட்டது. டெஸ்ட் போட்டிகளைப் போலவே, இரு அணிகளைச் சேர்ந்த வீரர்கள் வெள்ளை உடையில் சிவப்பு நிற கிரிக்கெட் பந்தை வைத்து விளையாடினார்கள். இரண்டு அணிகளும் தலா 40 ஓவர்கள் விளையாடிய அந்த முதல் போட்டியில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது ஆஸ்திரேலியா. ஒரே நாளில் முடிவு தெரிந்துவிட்டதால், இந்தப் போட்டிக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

சர்வதேசப் போட்டிகளில் இது முதல்முறை என்றாலும், இங்கிலாந்து கவுண்ட்டி போட்டிகளில் இந்தப் போட்டி, 1962-லேயே தொடங்கிவிட்டது. அப்போது 65 ஓவர்கள் கொண்ட போட்டியாக அது இருந்தது. 1971-ல் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பின்னர், 1975-ல் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு நாட்டு அணிக்கும் வெவ்வேறு வண்ண உடைகள், விளக்கொளியில் நடக்கும் பகலிரவுப் போட்டிகள், வெள்ளை நிறப் பந்துகள், தொலைக்காட்சி நேரலைகள் என்று திருவிழாக் கோலம் பூண்டது கிரிக்கெட். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டிகளின்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதும், இரவு பகல் பார்க்காமல் மைதானத்திலும் தொலைக்காட்சி முன்பும் ரசிகர்கள் பரவசத்துடன் அமர்ந்திருப்பதும் ஒருநாள் போட்டி சாதித்த வெற்றிகள்!

SCROLL FOR NEXT