வலைஞர் பக்கம்

இன்று அன்று | 1883 ஜனவரி 6 : கலீல் ஜிப்ரான் பிறந்த தினம்

செய்திப்பிரிவு

குழந்தைகள் உங்களுடையவை அல்ல. அவை, வாழ்வு தன்னையே தான் அடையக் கொள்ளும் ஏக்கத்தின் மகனும் மகளுமாக ஜனித்தவை.

உங்கள் குழந்தைகள் உங்களூடே தோன்றியவர்கள், உங்களிடமிருந்து அல்ல.

உங்களுடன் இருப்பினும் அவர்கள் உங்கள் உடமைகளல்லர்.

அவர்களுக்கு உங்களுடைய அன்பை நீங்கள் தரலாம், உங்கள் எண்ணங்களை அல்ல.

ஏனெனில், சுயமாக அவர்களிடத்தே எண்ணங்கள் பிறக்கின்றன.

அவர்கள் உடலுக்கு மட்டுமே நீங்கள் வீடமைக்கலாம், உயிருக்கு அல்ல.

ஏனெனில், உங்கள் கனவில்கூட நீங்கள் அடைய முடியாத எதிர் காலம்தான் அவர்களது உயிர் உறையும் வீடு.

நீங்கள் அவர்களைப் போல ஆவதற்காக கடின முயற்சி செய்யலாம்.

ஆனால், உங்களைப் போல அவர்களையும் ஆக்கிவிடக் கூடாது.

ஏனெனில், வாழ்வு பின்னடித்துச் செல்வதில்லை. நேற்றைய நாட்களில் சுணங்குவதுமில்லை.

உயிருள்ள அம்புகளாக உங்களிடமிருந்தே எய்யப்படும் குழதைகளுக்கு நீங்கள் வில்லுகள்.

வில்லாளி, காலாதீதத்தின் மார்க்கத்தில் குறிவைத்து, தனது அம்புகள் அதிவேகத்துடன் தொலை தூரம் செல்லும்படி, உங்களைத் தனது மகாசக்தியால் வளைக்கிறான்.

வில்லாளியின் கரத்தில் உங்கள் வளைவு ஆநந்திக்கட்டும்.

ஏனெனில், பறக்கும் அம்புகளை அவன் விரும்புகிற அளவுக்கு அசைவற்ற வில்லின் உறுதியையும் விரும்புகிறான்.

(கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி’ புத்தகத்தி லிருந்து ஒரு சிறு பகுதி. தமிழில்: பிரமிள்)

கலீல் ஜிப்ரானின் கவிதைகள் உலகம் முழுதும் பிரபலம். ஆங்கிலத்திலும் அரபி மொழியிலும் பல கவிதைகள் மற்றும் உரைநடைகளை எழுதியவர் இவர். சிறந்த ஓவியரும்கூட. லெபனானின் மிகச் சிறந்த கவிஞராக இன்றும் அறியப்படுபவர். லெபனானின் வடக்குப் பகுதியில் உள்ள பஷ்ரி நகரில் 1883 ஜனவரி 6-ல், மேரோனைட் கிறிஸ் தவக் குடும்பத்தில் பிறந்தவர் கலீல் ஜிப்ரான். அப்போது, ஓட்டமான் பேரரசில் லெபனான் இருந்தது.

அவரது தந்தை ஓட்டமான் பேரரசின் உள்ளூர் நிர்வாகத்தில் பணிபுரிந்தார். கையாடல் புகாரின்பேரில் 1891-ல் அவர் கைதுசெய்யப் பட்டார். இதனால் குடும்பத்தின் எதிர் காலம் கருதி தனது குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறினார் கலீல் ஜிப்ரானின் தாய். பாஸ்டன் நகரில் அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கியது. 1895-லிருந்து கலீல் ஜிப்ரானின் கல்வி தொடங்கியது. ஓவியக் கல்வியும் பயின்றார். மேற்கத்திய கலாச்சாரத்தில் அவர் மூழ்கி விடக் கூடாது என்று முடிவுசெய்த அவரது தாய், லெபனான் தலைநகர் பெய்ரூத்துக்கு அனுப்பி வைத்தார்.

அங்கு தனது கல்வியைத் தொடர்ந்த கலீல் ஜிப்ரான், 1902-ல் மீண்டும் பாஸ்டன் திரும்பினார். அவரது ஓவியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 1904-ல் பாஸ்டனில் நடந்த ஓவியக் கண்காட்சியில், பெண்கள் பள்ளியின் தலைமையாசிரியை மேரி எலிசபெத் ஹாஸ்கெலைச் சந்தித்தார். தன்னைவிட 10 வயது மூத்தவரான ஹாஸ்கலுடனான அவரது நட்பு, இன்றுவரை விவாதப்பொருளாக இருக்கிறது. கலீல் ஜிப்ரானின் ஓவியம் மற்றும் எழுத்துத் திறமையை வளர்த்ததில் ஹாஸ்கலின் பங்கு மிக முக்கியமானது. 1905 முதல் அரபி மொழியில் எழுதிவந்த கலீல் ஜிப்ரான், ஆங்கிலத் திலும் எழுதினார். 1918-ல் அவர் எழுதிய ‘தி மேட்மேன்’ எனும் ஆங்கிலக் கவிதை களின் தொகுப்பு வெளியானது. சிரியா கவிஞரான பிரான்சிஸ் மார்ஷாவின் படைப்பு களால் கலீல் ஜிப்ரான் தாக்கம் பெற்றார் என்று கருதப்படுகிறது.

1923-ல் ஜிப்ரான் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ (தி ப்ராஃபெட்) எனும் தத்துவப் படைப்பு அவரது படைப்புகளில் மிகச் சிறந்ததாகக் கருதப் படுகிறது. காசநோய் மற்றும் கல்லீரல் பாதிப்பு களால் 1931 ஏப்ரல் 10-ல் தனது 48-வது வயதில் கலீல் ஜிப்ரான் மரணமடைந்தார். தனது புத்தகங்களின் அமெரிக்க விற்பனையிலிருந்து கிடைக்கும் காப்புரிமைத் தொகையை கலீல் ஜிப்ரான் தனது பிறந்த ஊரான பஷாரியின் வளர்ச்சிக்கு எழுதிவைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

SCROLL FOR NEXT