வலைஞர் பக்கம்

முகம்மது ரஃபி 10

ராஜலட்சுமி சிவலிங்கம்

அற்புதக் குரலால் பல கோடி இதயங்களைக் கொள்ளைகொண்ட இந்தி பாடகர் முகம்மது ரஃபியின் பிறந்த நாள் இன்று (டிசம்பர் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர். பிறகு இவரது குடும்பம் பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தது. அப்பா முடிதிருத்தகம் வைத்திருந்தார். பாட்டு பாடி பணம் கேட்கும் ஒருவர் அங்கு வந்து பாடுவார். 7 வயதே ஆன இந்த சிறுவன், அவரது பாடல்களில் மெய்மறந்து அவர் பின்னாலேயே சுற்றுவான். அவரைப் போலவே பாடுவான்.

 ரஃபியின் குடும்ப நண்பரும் பின்னாளின் அந்த வீட்டு மாப்பிள்ளையுமான அப்துல் ஹமீத், இவரது திறமையை உணர்ந்து, 1944-ல் மும்பைக்கு அழைத்துவந்தார்.

 உஸ்தாத் படே குலாம் அலி கான், உஸ்தாத் அப்துல் வஹீத் கான், பண்டிட் ஜீவன்லால் போன்றவர்களிடம் இசை கற்றார். 1941-ல் ஷ்யாம் சுந்தர் இயக்கத்தில் முதன்முதலாக குல் பாலோச் என்ற பஞ்சாபி திரைப்படத்துக்கு பின்னணி பாடினார். அதே ஆண்டு அகில இந்திய வானொலியின் லாகூர் ஸ்டேஷனில் பாட அழைக்கப்பட்டார்.

 1945-ல் முதன்முதலாக ‘காவோன் கி கோரி’ இந்தி திரைப்படத்தில் பின்னணி பாடினார். இந்தி தவிர, அசாமி, கொங்கணி, போஜ்புரி, ஒரியா, பஞ்சாபி, பெங்காலி உட்பட 14 இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பாரசீகம், ஸ்பானிஷ், டச் என பல மொழிகளில் பாடியுள்ளார். சாஸ்திரிய இசை, கஜல், கவாலி, பஜன், தேசபக்திப் பாடல் என ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். பல மொழி இசை ஆல்பங்களில் பாடியுள்ளார்.

 பின்னணி பாடும்போது நடிப்பவரின் குரலுக்கு ஏற்பத் தன் குரலை மாற்றிப் பாடுபவர். பல சராசரி நடிகர்கள்கூட இன்றும் நம் மனதில் நிற்பதற்குக் காரணம் முகமது ரஃபி எனலாம்.

 ‘என் குரல் வளம் இறைவன் தந்த கொடை’ என்பார். சுமார் 25 நடிகர்களுக்குக் குரல் கொடுத்துள்ளார். இவரது பாட்டைக் கேட்டதுமே, அது எந்த ஹீரோவின் பாட்டு என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு குரலை வசப்படுத்திக்கொண்டவர்.

 பணத்தை பெரிதாகக் கருதியதில்லை. பல இசை அமைப்பாளர்களிடம் சொற்பத் தொகை வாங்கிக்கொண்டு பாடியுள்ளார். பல தயாரிப்பாளர்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்துள்ளார் என்று லட்சுமிகாந்த் (லட்சுமிகாந்த்-பியாரிலால்) கூறியுள்ளார்.

 1940 - 1980 இடையே 25 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். 6 முறை பிலிம்பேர் விருதுகள், தேசியத் திரைப்பட விருது, பத்மஸ்ரீ உட்பட ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

 பக்திப் பாடல்களை மனமுருகப் பாடுவார். இவர் பாடிய ராமன் பாடல்கள் பிரசித்தமானவை.

 பிரபலமான அனைத்து இசை அமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேல் இந்தியத் திரைப்பட பின்னணி உலகில் தேனினும் இனிய தன் குரலால் ஆதிக்கம் செலுத்தி, பின்னணிப் பாடல் உலகில் தனி முத்திரை பதித்த முகமது ரஃபி 56-வது வயதில் மறைந்தார்.

SCROLL FOR NEXT